Vaa Vaathiyaar Review - வா வாத்தியார் விமர்சனம்

buzzhy avatar   
buzzhy
முதலில் இந்தப் படத்துக்கு மிகப்பெரிய ப்ளஸ்ஸாக இருப்பது கார்த்தியின் நடிப்பு. ராமேஸ்வரம், ராமச்சந்திரன் என இரண்டு கேரக்டர்களை அசால்ட்டாக செய்திருக்கிறார்...
Rating:
3.0/5
Star Cast: கார்த்தி, க்ரித்தி ஷெட்டி
Director: நலன் குமாரசாமி

சென்னை: நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி, க்ரித்தி ஷெட்டி, சத்யராஜ், ராஜ்கிரண், கருணாகரன், ஷில்பா மஞ்சுநாத் உள்ளிட்டோர் நடித்திருக்கும் படம் வா வாத்தியார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்க; ஞானவேல் ராஜா தயாரித்திருக்கிறார். ஏகப்பட்ட முறை படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு ரிலீஸ் செய்யப்படாமல் இருந்த படம்; இன்று ஒருவழியாக ரிலீஸாகியிருக்கிறது. படம் எப்படி இருக்கிறது என்ற விமர்சனத்தை பார்க்கலாம்.

சூது கவ்வும், காதலும் கடந்து போகும் என இரண்டு தரமான படங்களை கொடுத்த நலன் குமாரசாமி பல வருடங்கள் கழித்து இயக்கியிருக்கும் படம் வா வாத்தியார். தாத்தா தீவிர எம்ஜிஆர் ரசிகராக இருக்கிறார். திரையில் தாத்தா எம்ஜிஆரின் படம் பார்த்துக்கொண்டிருக்கும்போதே வாத்தியார் எம்ஜிஆர் இறுந்துவிட; அதே நாளில், அதே நேரத்தில் தாத்தா ராஜ்கிரணுக்கு பேரன் பிறக்கிறார். அந்த பேரனை எம்ஜிஆரின் அடுத்த அவதாரமாக பார்க்கும் ராஜ்கிரண்; நேர்மையாக வளர்க்கிறார். ஆனால் கார்த்திக்குள்ளோ தகிடுதத்தங்கள் குடியேற; ஒரு சூழ்நிலை அவரை மாற்றுகிறது. பிறகு அநீதிகளை தட்டி கேட்கும் ஹீரோவாக மாறுகிறார். அதனையடுத்து என்ன ஆனது என்பதுதான் கதை.

கார்த்தியின் நடிப்பு: முதலில் இந்தப் படத்துக்கு மிகப்பெரிய ப்ளஸ்ஸாக இருப்பது கார்த்தியின் நடிப்பு. ராமேஸ்வரம், ராமச்சந்திரன் என இரண்டு கேரக்டர்களை அசால்ட்டாக செய்திருக்கிறார். படத்தில் கொஞ்சம் ஃபேண்டஸி ஜானரும் இருப்பதால் அதை புரிந்துகொண்டு தேவையான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். ஒரே நேரத்தில் ராமேஸ்வரமாகவும், ராமச்சந்திரனாகவும் மாறி மாறி நடிக்கும் இடங்களில் அப்ளாஸை அள்ளுகிறார். அந்நியன் படத்தில் அம்பி, ரெமோ உள்ளிட்ட கேரக்டர்களை ஒரே நேரத்தில் விக்ரம் செய்த பிறகு; இப்போது கார்த்திதான் அதை செய்திருக்கிறார். அப்படி நடிக்கும்போது எந்தவித பதற்றமும் இல்லாமல், குழப்பமும் இல்லாமல் ரசிகர்களிடம் கனெக்ட் ஆவது பெரிய விஷயம். அது இயல்பாகவே கார்த்தி நடிப்பில் கூடிவிட்டது.

 
Vaa Vaathiyar Movie Review Tamil  Is Karthi   s MGR Avatar Worth Watching in Theatres
Photo Credit:

அதேசமயம் எம்ஜிஆராக நடிக்கும்போது தெரியும் செயற்கைத்தனமும், ஒட்டாத சில எம்ஜிஆர் மேனரிஸங்களும் அந்த ரோலை கொஞ்சம் டல்லடிக்கவும் செய்துவிட்டது. ஆனாலும் அதை வெளியில் தெரியாமல் மேனேஜ் செய்துவிட்டார். க்ரித்தி ஷெட்டிக்கு இது முதல் தமிழ் படம். அவருக்கன கேரக்டர் இன்னும் ஸ்ட்ராங்காக எழுதப்பட்டிருக்கலாம் என்றே தோன்றுகிறது. சில பாடல்களில் அவரது நடனத்தை தவிர்த்து பல இடங்களில் நடிப்பு ஒன்றும் பெரிதாக சொல்லிக்கொள்ளும்படி இல்லை என்பது வருத்தத்துக்குரிய ஒன்று.

மற்ற கேரக்டர்கள்: படம் முழுக்க ராமச்சந்திரனுடன் வரும் கேரக்டராக ஆன்ந்த் ராஜ். தனது வழக்கமான நடிப்பை வெளிப்படுத்துகிறார். மேலும் எம்ஜிஆரின் தீவிர ரசிகராக ஆரம்பத்திலேயே ராஜ்கிரண் பதிந்துவிட்டதால்; இவரது கேரட்கர் இன்னும் எடுபடாமல் போகிறது. அதேசமயம் ஒரிஜினல் எம்ஜிஆர் ரசிகர் எப்படி வெறித்தனமாக இருப்பாரோ அதை கண் முன்னே காட்சிப்படுத்திவிட்டதில் சிறப்பு வாங்குகிறார் ஆனந்த். படத்தின் வில்லனாக சத்யராஜ். இதில் அவருக்கு வில்லத்தனம் கொஞ்சம் கம்மிதான். போதாக்குறைக்கு பல்லை எல்லாம் எடுப்பாக காட்டுகிறேன் என்கிற பெயரில் அவரை அலங்கோலம் செய்துவிட்டார்களோ என தோன்றுகிறது. கண்டிப்பாக இந்த கேரக்டர் சத்யராஜை பொறுத்தவரை யானை பசிக்கு சோளப்பொறிதான்.

நலனின் மேக்கிங்: நலன் குமாரசாமியின் மேக்கிங்கை பொறுத்தவரை இன்னும் அவர் பழைய ஃபார்மை இழக்கவில்லை என்றே தோன்றுகிறது. விறுவிறு ஸ்க்ரீன்ப்ளே, டார்க் காமெடி வசனங்கள் என தனது ஏரியாவில் பட்டையை கிளப்பியிருக்கிறார். அதேசமயம் ராமேஸ்வரம் ராமச்சந்திரனாக மாறும் இடங்களில் எல்லாம் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாமோ என தோன்றுகிறது. ஃபேண்டஸி என ரசிகர்களை நம்ப வைத்தாலும்; ஏதோ கிரிகாலன் மேஜிக் ஷோ பார்ப்பது மாதிரி அவ்வப்போது சில இடங்களில் தோன்றியது படத்தின் மைனஸாக இருந்தது.

சந்தோஷ் நாராயணன்: அதேசமயம் எடுத்துக்கொண்ட கதைக்களத்தை நேர்த்தியாக சொன்ன விதத்திலும், வடிவமைத்திருந்த கேரக்டர்களை முடிந்த அளவு திருப்திகரமாக டெலிவர் செய்ததிலும் பாஸ் மார்க் வாங்கிவிட்டார். படத்தின் முக்கிய பலங்களில் ஒருவர் சந்தோஷ் நாராயணன். சூது கவ்வும், காதலும் கடந்து போகும் ஆகிய இரண்டு படங்களில் எப்படி நலன் - சந்தோஷ் கூட்டணி சொல்லி அடித்ததோ அதேபோல் இதிலும் மிரட்டியிருக்கிறார் சந்தோஷ். படத்தின் ஆரம்பத்திலிருந்து இறுதிவரை விதவிதமான இசையை நல்ல விதமாக கொடுத்து ஆறுதல் படுத்திவிட்டார்.

என்ன மைனஸ்: படத்தில் மைனஸ்கள் இருக்கின்றன. இயக்குநரின் ஒட்டுமொத்த கவனமும் கார்த்தியின் கேரக்டரை சரியாக ரசிகர்களிடம் கொண்டு சேர்த்துவிட வேண்டும் என்பதிலேயே இருந்துவிட்டது; கதைக்களத்தில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம் என தோன்றுகிறது. அதேபோல் பல இடங்களில் லாஜிக் ஓட்டைகளும் இருக்கின்றன. திரைக்கதை நகர்ந்த விதம் அதை ரசிகர்களிடமிருந்து கொஞ்சம் மறக்கடிக்க செய்தாலும்; கொஞ்ச நேரத்திலேயே அது துருத்திக்கொண்டு நிற்பது பெரிய மைனஸாக பார்க்கப்படுகிறது. அதேபோல் இரவு நேரங்களில் ராமச்சந்திரனாக மாறி (எம்ஜிஆர்) அநீதிகளை ஹீரோ தடுக்கும்போது முகமூடி உள்ளிட்ட லோக்கல் சூப்பர் ஹீரோ படங்கள் நினைவுக்கு வருவதையும் தவிர்க்க முடியவில்லை. ஆகமொத்தத்தில் பல வருடங்களுக்கு பிறகு படம் இயக்கியிருக்கும் நலன் குமாரசாமி வாத்தியார் எம்ஜிஆர் மற்றும் தனது புத்திசாலித்தனமான மேக்கிங்கால் பாஸ் மார்க்குக்கும் மேலே வாங்குகிறார். கண்டிப்பாக குடும்பத்துடன் சென்று தியேட்டரில் வா வாத்தியாருக்கு ஒரு ஹலோ சொல்லிவிட்டு வரலாம்.

Nema komentara