சென்னை: ஆனந்த் எல். ராய் இயக்கத்தில் தனுஷ், கிருத்தி சனோன், பிரகாஷ் ராஜ் நடிப்பில் உருவான 'தேரே இஷ்க் மே' திரைப்படம் இன்று திரையரங்குகளில் தமிழ் டப்பிங்குடன் வெளியானது. ராஞ்சனா (அம்பிகாபதி) படத்தைத் தொடர்ந்து ஏ.ஆர். ரஹ்மான் இந்த படத்துக்கும் தனது காதல் மெட்டுக்களை போட்டு படத்தை காப்பாற்ற முயற்சி செய்துள்ளார்.
ராஞ்சனா படத்தை போல மீண்டும் ஒரு காதல் காவியத்தை உருவாக்க ஆனந்த் எல். ராய் முயற்சி செய்துள்ளார். ஆனால், கொஞ்சம் மிஸ் ஆகியிருந்தால், தனுஷின் டியூட் படத்தை போலத்தான் இந்த படம் மாறியிருக்கும் நிலை தான் என்கிற அளவுக்குத்தான் படம் உள்ளது.

பீஸ்ட், திருவிளையாடல் ஆரம்பம், டிராகன், டியூட் என ஏகப்பட்ட படங்களின் கலவையாகவே உருவாகியுள்ள இந்த தேரே இஷ்க் மே திரைப்படத்தின் முழு விமர்சனத்தை இங்கே பார்க்கலாம் வாங்க..
தேரே இஷ்க் மே கதை: கல்லூரியில் டிராகனாக ரவுடிசம் பண்ணிக் கொண்டு சுற்றிக் கொண்டிருக்கும் சங்கரை (தனுஷ்) மனிதர்களிடமிருந்து வயலென்ஸை முற்றிலுமாக நீக்க முடியும் என தனது பிஹெச்டி படிப்புக்காக சங்கரை பரிசோதனை எலியாக்குகிறார் முக்தி (கிருத்தி சனோன்). அழகான பெண்ணை பார்த்ததும் அராஜகமான இளைஞனுக்கு காதல் வந்து விடுகிறது. அவர் சொல்வதையெல்லாம் கேட்கிறார். கடைசியில், இன்னொருவரை கட்டிப் பிடித்துக் கொண்டு டாட்டா காட்டி கிளம்ப மீண்டும் அசுரனாக தனுஷ் மாறுகிறார்.
ஐஏஎஸ் அதிகாரியின் மகள் நான் என்றும் சாதாரண 10க்கு 10 வீட்டில் இருப்பவன் நீ என்பதை சங்கருக்கு புரிய வைக்க வீட்டுக்கு வரவழைக்கிறார். அங்கே முக்தியின் அப்பா ஐஏஎஸ் படித்து பாஸ் செய்தால் என் மகளை கட்டி வைக்கிறேன் என்று கூறுகிறார்.
ஐஏஎஸ் தேர்வில் தனுஷ் வெற்றி பெறுகிறாரா? கிருத்தி சனோன் காதல் கிடைக்கிறதா? தனுஷ் ஏன் விமானப்படையில் சேர்கிறார். அங்கே கிருத்தி சனோனுக்கு என்ன வேலை என ஏகப்பட்ட இடியாப்ப சிக்கலுடன் இந்த படத்தை இயக்குநர் ஆனந்த் எல். ராய் சொல்லியிருக்கிறார்.

படம் எப்படி இருக்கு?: ராஞ்சனா படத்தின் வாரணாசி கனெக்ஷன் மற்றும் முகுந்தனின் நண்பன் வந்து சங்கரிடம் பேசும் காட்சிகள் எல்லாம் சிறப்பு. ஆரம்பத்தில் இருந்தே படத்தில் தனுஷ் மற்றும் கிருத்தி சனோன் நன்றாகவே நடித்தாலும், அவர்கள் தனித்தே தெரிகின்றனர். அம்பிகாபதி படத்தை போல கதாபாத்திரங்களாக ஒட்டவே இல்லை. ஏகப்பட்ட படங்களில் பார்த்து பழகிப்போன கதைகளை ஒன்றாக கோர்த்து ஒரு புதிய காதல் காவியத்தை படைக்கிறேன் என ஆனந்த் எல். ராய் நானும் அவுட்டேட் இயக்குநர் ஆகிவிட்டேன் என காட்டிவிட்டார்.
முதல் பாதி முடிந்து இடைவேளை விடும்போதே ஆளவிடுங்கப்பா சாமி என ரசிகர்கள் ஓட ஆரம்பித்துவிட்டனர். 2ம் பாதியையும் பார்த்து விடுவோம், வாங்கிய டிக்கெட்டுக்கு என மீண்டும் அமர்ந்தால், அதன் பின்னர், என் குழந்தையை நீ தான் வளர்க்கணும் என விடாத கருப்பாக கிருத்தி சனோன் தனுஷை தேடி வரும் இடமெல்லாம் தியேட்டரில் குபீர் சிரிப்பு.
ஆரம்பத்திலேயே ஸ்டேஷனில் இருக்கும் தனுஷை கிருத்தி சனோன் அழைத்துச் செல்லும் காட்சி அப்படியே டியூட் படத்தில் இடம்பெற்ற நிலையில், கிளைமேக்ஸில் என் குழந்தையை நீ தான் வளர்க்கணும்னு ஹீரோயின் செல்லும் இடத்தில் அந்த படம் போலவே கிட்டத்தட்ட மாறிவிடுகிறது. ஏற்கனவே ராயன் கிளைமேக்ஸில் தனுஷ் கையில் ஒரு குழந்தையை அபர்ணா பாலமுரளி கொடுத்துவிட்டு போவார். தனுஷை பார்த்தால் எப்படி தெரிகிறது என்று தான் தெரியவில்லை. குபேரா படத்திலும் ஒரு குழந்தை. ஆனால், மீண்டும் அம்பிகாபதி படத்தை போல ஒரு காதல் காவியத்தைக் கொடுக்கிறேன் என இயக்குநர் கொஞ்சம் ரூட்டை திருப்பியது சற்றே ஆறுதல் என்றாலும் படம் படுத்துவிட்டது. கலெக்டர் வீட்டுக்குள் பெட்ரோல் குண்டை எல்லாம் சர்வ சாதராணமாக தனுஷ் வீசும் காட்சிகளில் வரும் லாஜிக் மீறல்களை எல்லாம் சகித்துக் கொள்ளவே முடியவில்லை.
பிளஸ்: ஏ.ஆர். ரஹ்மானின் இசை தான் இந்த படத்துக்கும் உயிர்நாடியாக உள்ளது. கிருத்தி சனோன் ஆரம்பத்தில் மெச்சூரான பெண்ணாக நடித்த காட்சிகளில் நல்லாவே ஸ்கோர் செய்தார். தனுஷ் வழக்கம் போல காதல் தோல்வி இளைஞனாக நடித்து அசத்தியுள்ளார். முதல் காட்சியில் விமான ஓட்டியாக அவர் செய்யும் சாகசங்கள் சிறப்பாக இருந்தாலும், கிளைமேக்ஸில் அது ரொம்பவே ஓவர்டோஸ் ஆக மாறுகிறது. தனுஷ், கிருத்தி சனோன் இருவரும் போட்டிப் போட்டு நடிச்சிக் காட்டுறேன் என இறுதி வரை நடித்துள்ளது பெரிய பிளஸ் என்றாலும், எதுக்கு? என்கிற கேள்வி தான் எழுகிறது.
மைனஸ்: பணக்கார பெண், ஏழைப் பையன் காதல் கதையா? அல்லது ரக்ட் பாய், படிச்ச பெண் காதல் கதையா? கிருத்தி சனோன் ஏன் தனுஷை தேடுகிறார். கடைசி வரைக்கும் ஏன் தனுஷுக்கு தொல்லை கொடுக்கிறார் என ஏகப்பட்ட குழப்பங்கள் படத்திற்கு மிகப்பெரிய மைனஸ் ஆக மாறுகிறது. ஆனந்த் எல். ராய் காதலை புனிதப்படுத்துகிறாரா? அல்லது காதல் வலியை மட்டுமே கொடுக்கும், காதலிக்க வேண்டாம் என சொல்ல வருகிறாரா? இந்த காலத்தில் காதலே இல்லை என்கிறாரா? என்பதே கதை மற்றும் திரைக்கதை ஓட்டத்தை ஸ்தம்பிக்க வைக்கிறது. பிரகாஷ் ராஜ் காலில் விழும் காட்சியெல்லாம் ரொம்பவே டூமச்சாக படமாக்கப்பட்டுள்ளது. இந்தி ரசிகர்களை இந்த தேரே இஷ்க் மே கவருமா? என்பதை வெயிட் பண்ணித்தான் பார்க்க வேண்டும்.