சென்னை: டைட்டானிக் படத்திற்கு பிறகு தன்னை ஒட்டுமொத்தமாக அவதார் படத்திற்காகவே அர்பணித்து விட்டார் ஜேம்ஸ் கேமரூன் என்றுதான் சொல்ல வேண்டும். அவதார் படத்துக்குப் பிறகு பல ஆண்டுகள் கழித்து அவதார் வே ஆஃப் வாட்டர் படத்தை ஜேம்ஸ் கேமரூன் உருவாக்கியிருந்தார். அதன் தொடர்ச்சியாகவே இந்த அவதார் ஃபயர் அண்ட் ஆஷ் திரைப்படம் உருவாகியிருக்கிறது.
உலகளவில் ஒட்டுமொத்த ரசிகர்களையும் அவதார் முதல் பாகம் கட்டிப் போட்ட நிலையில், அவதார் 2 குறித்த சில விமர்சனங்களும் எழுந்தன. ஆனால், அவதார் 3ம் பாகத்தை பார்த்த ரசிகர்கள் 2009ம் ஆண்டு திரையரங்கில் முதல் முறையாக பாண்டோரா உலகத்துக்கு நம்மை எப்படி ஜேம்ஸ் கேமரூன் அழைத்துச் சென்றாரோ அதே போலவே இந்த பாகமும் உள்ளது என கொண்டாடி வருகின்றனர்.

முதல் பாகத்தில் இருந்தே தொடரும் காலனல் மைல்ஸ் குவாட்ரிச் இந்த சீசனிலும் வில்லனாக கடைசி வரை தொடர்ந்தாலும், அவரையும் கிரிஞ்சாக மாற்றி பாசக்கார அப்பாவாக மாற்றிவிட்டார் ஜேம்ஸ் கேமரூன். ஆனால், அவரை விட அட்டகாசமான ஒரு வில்லியை படையப்பா நீலம்பரிக்கு சவால் விடுவது போல நெருப்பு தேவதையை இந்த முறை இறக்கி சம்பவம் செய்துள்ளார் ஜேம்ஸ் கேமரூன் என்று தான் சொல்ல வேண்டும். அவதார் ஃபயர் அண்ட் ஆஷ் படத்தின் கதை, பிளஸ் மற்றும் மைனஸ் குறித்து விரிவாக இந்த விமர்சனத்தில் பார்க்கலாம் வாங்க..
அவதார் ஃபயர் அண்ட் ஆஷ் கதை: ஜேக்ஸ் சுல்லியின் ஒரு மகன் மரணத்துக்கு இன்னொரு மகன் அப்பாவின் கமாண்டை மீறியது தான் காரணம் என்கிற குற்ற உணர்ச்சியில் படம் ஆரம்பிக்கிறது. டைட்டில் எல்லாம் போட்டு டைம் வேஸ்ட் பண்ணாமல் படத்துக்குள் டைரக்ட்டாகவே நம்மை கொண்டு சென்றுவிட்டனர். வில்லனின் மகன் ஸ்பைடர் தனது குழந்தைகளுடன் நெருங்கி பழகுவதை நெய்த்ரி விரும்பவில்லை. ஆக்ஸிஜன் தட்டுப்பாடு பிரச்சனை உள்ள நிலையில், ஸ்பைடரை வான் வியாபாரிகள் மூலமாக கொண்டு சென்று அவனை மனிதர்கள் வாழும் பகுதிக்கு விட்டு விட முடிவு செய்து தனது குடும்பத்துடன் ஜேக்ஸ் சுல்லி பயணம் மேற்கொள்கிறார்.
பறக்கும் மீன்களை வைத்து கப்பல் போல உருவாகிய அந்த பிரம்மாண்டத்தை பார்த்து வியந்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு நெருப்பு தேவதையான வராங் பைரேட்ஸ் கொள்ளையர்கள் போல தனது கூட்டத்துடன் வந்து அந்த கப்பலை சூறையாடுகிறார். அங்கே இருந்து தனது குடும்பத்தை காப்பாற்ற ஜேக்ஸ் சுல்லி ஓடுகிறார் ஓடுகிறார் வாழ்க்கையின் எல்லைக்கே ஓடுகிறார் என்பது போல மிகப்பெரிய ஆக்ஷன் பிளாக்பஸ்டராக இந்த படத்தின் கதையை ஜேம்ஸ் கேமரூன் உருவாக்கியுள்ளார்.
ஸ்பைடர் அவனுடைய மெமரி அப்பாவிடம் சேர்ந்தாரா? ஜேக்ஸ் சுல்லி தனது குடும்பத்தையும் தனது நாவி இனத்தையும் காப்பாற்றினாரா? அந்த கிரேஸுக்கு பிறந்த மாயஜால குழந்தை கிரிக்கு ஏவா உதவினாரா என ஏகப்பட்ட கேள்விகளுக்கு இந்த அவதார் ஃபயர் அண்ட் ஆஷ் திரைப்படம் ஏகப்பட்ட ஆக்ஷன் பிளாக்குகளுடன் தேவையான அளவு சென்டிமென்ட்டையும் கலந்து கொடுத்திருக்கிறது.

படம் எப்படி இருக்கு?: ஜேம்ஸ் கேமரூன் கதை எழுதி, தயாரித்து, இயக்கியுள்ள அவதார் ஃபயர் அண்ட் ஆஷ் திரைப்படம் பக்கா ஃபயராகவே உள்ளது. மனிதர்கள் பூமியை அழித்தது போல பாண்டோராவையும் அழித்து விடுவார்கள் என்கிற வசனத்தில் தொடங்கி, தனது கணவரை கைது செய்து அழைத்துச் சென்றாலும், தனி ஒருத்தியாக போராடி எமனே அழைத்துச் சென்றாலும் கணவனை மீட்கும் சாவித்ரியாக நெய்த்ரியின் காட்சிகள் எல்லாம் 10 ஆயிரம் வாலா சரவெடி தான்.
கடைசி கிளைமேக்ஸ் காட்சியில், ஒரு பெரிய பிரபஞ்சத்தின் ஒரு சிறு புள்ளி தான் பாண்டோரா என்றும் அதன் கதை தான் நீங்கள் பார்த்த பிரம்மாண்டம், ரியல் பிரம்மாண்டம் இன்னும் இருக்கு என்பது போல ஜேம்ஸ் கேமரூன் வைத்த அந்த ஒற்றைக் காட்சி வியப்பின் உச்சிக்கே கொண்டு சென்று விடுகிறது.
மக்களின் தியாகம், மீன்களின் போராட்டம், ஜேக்ஸ் சுல்லியின் குழந்தைகளின் வீரம் என அவதார் 3ம் பாகம் வேறு ஒரு தளத்திற்கு சென்றுவிட்டது. வராங்க் வரும் இடங்கள் எல்லாம் இடி முழக்கம் தான். வராங்க் உடன் கைகோர்த்துக் கொண்டு ஜேக்ஸ் சுல்லியை பிடிக்க குவாரிட்ச் செய்யும் சூழ்ச்சிகள், வராங்கையே லவ்வராக மாற்றும் இடமெல்லாம் அட்டகாசம்.
பிளஸ்: படத்தின் முதல் ஃபிரேமில் இருந்து கடைசி ஃபிரேம் வரை பிளஸ் தான். விஷுவல் ட்ரீட் விரும்பிகளுக்கான பக்காவான 3டி படம் தான் இந்த அவதார் 3. ஜேம்ஸ் கேமரூன், சாம் வொர்த்திங்டன், ஜோ சல்டானா, கேட் வின்ஸ்லெட், ஊனா சாப்ளின் (வராங்க்) என நடிகர்களின் முகங்கள் தெரியவில்லை என்றாலும், அவர்கள் போட்டுள்ள உழைப்பு தெளிவாக தெரிகிறது. ரூசல் கார்ப்பெண்டரின் ஒளிப்பதிவு மற்றும் கேமரா கோணங்கள் பிரம்மிப்பின் உச்சம். அண்டர் வாட்டர் மற்றும் ஆகாய மார்க்க காட்சிகள் என எல்லாமே சிறப்பு. சைமன் பிராங்ளினின் பின்னணி இசை படத்துக்கு பெரிய பலமாக உள்ளது.
மைனஸ்: 2வது பாக கதையின் தொடர்ச்சியாக இருந்த நிலையில், புதிதாக படத்தை பார்க்கும் ரசிகர்களுக்கு எந்தவொரு லீடும் கொடுக்கவில்லை என்பது ஒரு சிறு குறையாக உள்ளது. கதை மற்றும் திரைக்கதையிலும் பெரிதாக எந்தவொரு முயற்சியும் செய்யவில்லை. ஜேக் சுல்லியை பிடிப்பதே பெரிய குறிக்கோளாக உள்ளது. ஜேக் சுல்லிக்கும் தனது குடும்பத்தை காப்பாற்ற ஓடிக்கொண்டே இருக்க வேண்டும். கடைசியில், இறை சக்தி காப்பாற்றும் என்பது போல, முதல் பாகம் மற்றும் 2ம் பாகத்தில் இருந்த அதே கதையையே இங்கே மீண்டும் ஜேம்ஸ் கேமரூன் விஷுவல் பிரில்லியன்ஸ் உடன் கொடுத்துள்ளார். இந்த படத்திற்கு மைனஸ் மற்றும் விமர்சனங்களை எல்லாம் பார்ப்பதை விடுத்து, தியேட்டரில் படத்தின் மேஜிக்கை கண்டு ரசியுங்கள்! ஜேம்ஸ் கேமரூன் தாராளமாக அவதார் 4ம் பாகத்தை எடுக்கட்டும்!