மாஸ்க் விமர்சனம்.. 440 கோடி கொள்ளை. கோலிவுட் மணி ஹெய்ஸ்ட்

buzzhy avatar   
buzzhy
படத்தின் ஆரம்பத்திலேயே நான் கெட்டவன் தான் ஆனால், எச்சை இல்லை என கவின் வெறும் டயலாக்காக சொல்லாமல், அவர் நடித்த வேலு கதாபாத்திரத்தையே அப்படி செதுக்கியிருப்பதே பார்க்க புதுசாகவும் வித்தியாசமாகவும் உள்ளது..
Rating:
3.5/5
Star Cast: கவின், ஆண்ட்ரியா
Director: விகர்ணன் அசோக்

 

சென்னை: கவின், ஆண்ட்ரியா நடிப்பில் விகர்ணன் அசோக் இயக்கத்தில் இன்று வெளியான 'மாஸ்க்' திரைப்படம் கண்டிப்பாக ரசிகர்களை தியேட்டருக்கு வரவழைக்கும் அனைத்து அம்சங்களையும் கொண்டிருக்கிறது.

 

வெற்றிமாறன் ஆலோசகராக இந்த படத்தில் செயல்பட்டார் என அறிவித்த நிலையில், எனக்கு என்னமோ நெல்சன் தான் கவின் படத்துக்காக பல ஐடியாக்களை கொடுத்திருப்பார் என்று தெரிகிறது. அந்தளவுக்கு டார்க் ஹியூமர் காட்சிகளும், காமெடிகளும் பக்காவாக வொர்க்கவுட் ஆகியிருக்கிறது.

 
Mask Review in Tamil  Kavin and Andrea Jeremiah s Powercul Cat and Mouse Game for a Big Money

படத்தின் ஆரம்பத்திலேயே நான் கெட்டவன் தான் ஆனால், எச்சை இல்லை என கவின் வெறும் டயலாக்காக சொல்லாமல், அவர் நடித்த வேலு கதாபாத்திரத்தையே அப்படி செதுக்கியிருப்பதே பார்க்க புதுசாகவும் வித்தியாசமாகவும் உள்ளது. மாஸ்க் படத்தின் கதை, பிளஸ், மைனஸ் உள்ளிட்ட முழு விமர்சனத்தை இங்கே பார்க்கலாம் வாங்க..

மாஸ்க் கதை: அரசியல் கட்சித் தலைவரான மணிவண்ணன் (பவன்) வரும் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு வெற்றிப் பெற மக்களுக்கு ஓட்டுக்கு காசு கொடுக்க சுமார் 440 கோடி பணத்தை பாலியல் தொல்லை காரணமாக பாதிக்கப்பட்ட பெண்களை பாதுகாக்கும் போர்வையில் வலம் வரும் பூமி (ஆண்ட்ரியா) உதவியை நாடுகிறான். பூமியின் சூப்பர் மார்க்கெட்டில் பதுக்கி வைத்து பணம் பட்டுவாடா பண்ணுவதற்கு தயார் நிலையில், இருக்கும் நிலையில், எம்.ஆர். ராதா மாஸ்க் அணிந்த ஒரு கூட்டம் பணத்தை திருடுகிறது. டிடெக்டிவ் ஏஜென்ட்டாக கோல்மால் வேலைகளை செய்து பணம் சம்பாதித்து வரும் வேலு (கவின்) எப்படி இந்த வலையில் சிக்குகிறான். எல்லா பிரச்சனைகளும் சரி செய்தாரா? இல்லையா? என்பது தான் இந்த மாஸ்க் படத்தின் கதை.

படம் எப்படி இருக்கு?: ஆரம்பத்திலேயே இயக்குநர் நெல்சன் வாய்ஸ் ஓவரில் இடைவேளை காட்சியில் பணம் கொள்ளையடிக்கப்பட்டது மற்றும் ஆண்ட்ரியாவிடம் கவின் எப்படி சிக்கியிருக்கிறார். ஆண்ட்ரியா பவனிடம் எப்படி சிக்கியிருக்கிறார் என்பதை சொல்லிவிட்டு படத்திற்குள் செல்லும் இடம் சிறப்பாக உள்ளது.

கவின் அந்த மாஸ்க் அணிந்த முகமூடி திருடன் இல்லை என்கிற நிலையில், கடைசி வரை அவன் யார் என்பதும், அவனது கூட்டம் எதற்காக இப்படியொரு பல கோடி ரூபாய் கொள்ளையில் ஈடுபடுகிறது என்பது கிளைமேக்ஸில் ரிவீல் ஆகும் இடம் என கடைசி வரை இயக்குநர் தான் சொல்ல வந்த கதையை கன்வின்சிங்காக சொல்லியிருக்கிறார்.

கவினுக்கு இந்த படத்தில் ஹீரோயினாக வரும் ரதி (ருஹானி சர்மா) போர்ஷன் எல்லாம் கொஞ்சம் ஜீரணிக்க முடியாத ஒன்றாக இருந்தாலும், ஆரம்பத்திலேயே கவினுக்கு கொடுத்த அடைமொழி மற்றும் கவின் அந்த சூப்பர் மார்க்கெட்டில் நடக்கும் கொள்ளை சம்பவத்தில் சிக்கும் இடத்திற்கு கனகச்சிதமாக பொருந்துகிறது.

இளம் பெண்களை பாதுகாக்கும் அன்னை தெரசா போல ஆரம்பத்தில் காட்டப்படும் ஆண்ட்ரியாவின் இன்னொரு நீலம்பரி முகத்தை பார்க்கும் போதே பயம் தொற்றிக்கொள்ளும் அளவுக்கு கடைசி வரை பூமி கதாபாத்திரத்தில் நிலையாக நடித்து ஸ்கோர் செய்துள்ளார். தயாரிப்பாளராகவும் இந்த படத்தில் ஆண்ட்ரியா தனது பங்கை செலுத்தியுள்ள நிலையில், அவரது பேய்த்தனமான நடிப்பு நிச்சயம் படத்தை வெற்றிப் படமாக மாற்றும் என்றே தெரிகிறது.

பிளஸ்: படத்தின் ஆரம்பத்தில் கவினை அறிமுகப்படுத்தும் விதம், இடைவேளையில் சூப்பர் மார்க்கெட்டில் மக்கள் கொள்ளையடிக்கும் காட்சி, இறுதி கிளைமேக்ஸ் போர்ஷன் என ஏகப்பட்ட ஹை மொமண்ட்ஸை கச்சிதமாக இயக்குநர் எழுதி இயக்கியுள்ளார். ஜி.வி. பிரகாஷ் பின்னணி இசையில் படத்துக்கு பெரிய பலமாக இருந்துள்ளார். மிடில் கிளாஸ் காமன் மேன் நினைத்தால் என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும் என்பதை உன்னைப் போல் ஒருவன் படத்தை விட அழுத்தமாக சொன்ன விதம் சிறப்பு. ஜார்ஜ் மரியன், ஆடுகளம் நரேன், சார்லி, கல்லூரி வினோத் உள்ளிட்ட பலர் படத்துக்கு பெரிய பலமாக மாறியுள்ளனர். அதிலும், ஒரு கதாபாத்திரத்தின் ட்விஸ்ட் ரசிகர்களை கண்டிப்பாக ஆச்சர்யத்தில் ஆழ்த்தும்.

மைனஸ்: பிக் பாஸ் அர்ச்சனா வரும் போர்ஷன் எல்லாம் டாக்டர் படத்தை நினைவுப் படுத்துகிறது. மேலும், ரொம்பவே செயற்கையாக இருக்கும் உணர்வைத் தருகிறது. கவினின் அந்த கள்ளக் காதல் போர்ஷனும் சகிக்கவில்லை. ரத்தத்தில் வழுக்கி விழுந்து மரணிப்பதெல்லாம் டூமச். கடைசியில், ஆண்ட்ரியா ஏன் அவ்வளவு ரத்த வெள்ளத்திலும் வழுக்கி விழவில்லை என்கிற கேள்வியும் தயாரிப்பாளர் என்பதால் அந்த கடைசி சீனை ஏன் காட்டாமல் விட்டு விட்டார்களா? என்கிற கேள்விகளையும் எழுப்புகிறது. ஜி.வி. பிரகாஷ் இசையில் பாடல்கள் பெரிதாக கைகொடுக்கவில்லை. இரவினில் ஆட்டம் ரீமிக்ஸ் இன்னமும் பெட்டராக இருந்திருக்கலாம்.

படத்தில் சில குறைகள் இருந்தாலும், கோலிவுட்டில் ஒரு மணி ஹெய்ஸ்ட் முயற்சியை மிடில் கிளாஸ் காமன் மேன் மக்களின் மனநிலையை மையப்படுத்தி படமாக்கிய விதம் மற்றும் கடைசி வரை என்ன நடக்கும் படம் எப்படி முடியும் யார் அந்த மாஸ்க் மேன் என்கிற ஆர்வம் படத்தை பக்கா என பாராட்ட வைக்கிறது. கவினுக்கு கண்டிப்பாக இது சிக்சர் என்று சொல்ல முடியவில்லை என்றாலும் பவுண்டரி தான்!

No comments found