சென்னை: அமேசான் பிரைம் ஓடிடியில் நேரடியாக வெளியாகி உள்ள பிரியங்காவின் 'The Bluff' படத்தின் விமர்சனத்தை இங்கே காணலாம். பாலிவுட்டில் இருந்து திடீரென பட வாய்ப்புகள் குறைந்த நிலையில், ஹாலிவுட்டுக்கு சென்று ஆரம்பத்தில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்த பிரியங்கா சோப்ரா சமீப காலமாக ஆக்ஷன் ஹீரோயினாக அசத்தி வருகிறார்.
ராஜமெளலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் வாரணாசி படத்தில் ஹீரோயினாக நடித்து வரும் பிரியங்கா சோப்ராவின் ஓடிடி ஆக்ஷன் படம் தேறியதா? இல்லையா? என்பது குறித்து இந்த விமர்சனத்தில் பார்க்கலாம் வாங்க..

தி ப்ளஃப் கதை: ரூசோ சகோதர்கள் மற்றும் பிரியங்கா சோப்ரா இணைந்து தயாரித்து நடித்துள்ள The Bluff திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடியில் டிரெண்டாகி வருகிறது. ஃபிரங்க் இ. ஃபிளவர்ஸ் இயக்கத்தில் இந்த படம் உருவாகி உள்ளது. மோசமான கடற்கொள்ளையனான கானர் (கார்ல் அர்பன்) ஒரு கப்பலை கொள்ளையடித்து விட்டு அந்த கப்பலின் கேப்டனை சிறை பிடிக்கிறார். மேலும், அவரிடம் தனது தங்க புயல் எங்கே எனக் கேட்டுவிட்டு அந்த கேப்டன் வந்த தீவை நோக்கி தனது அரக்கத்தனமான கடற்கொள்ளையர்களுடன் வருகிறான்.
மாற்றுத்திறனாளி மகள் மற்றும் வயதுக்கு வந்த உறவுக்கார பெண்ணை பாதுகாத்துக் கொண்டு வாழ்ந்து வருகிறார் எர்செல் (பிரியங்கா சோப்ரா). அவர்களது அழகான குட்டித் தீவை நோக்கி வில்லன் வந்து இறங்க அங்கே உள்ள மனிதர்களை எல்லாம் கொன்று புதைக்கிறார். தனது மகளையும் உறவுக்கார பெண்ணையும் அழைத்துக் கொண்டு ரகசிய இடத்திற்கு நகர்கிறார்.
அவரை வில்லன் கானர் துரத்தி வந்து பிடித்து அவரிடம் இருந்த தங்கத்தை மீட்டாரா? அல்லது தனது கணவரையும் குடும்பத்தையும் வில்லனிடம் இருந்து போராடி எர்செல் காப்பாற்றினாரா? இல்லையா? என்பது தான் படத்தின் கதை.

பார்க்கலாமா? வேண்டாமா?: பிரியங்கா சோப்ராவின் பாட்ஷா ஸ்டைல் படம் தான் இந்த தி ப்ளஃப். எனக்கு இன்னொரு பெயர் இருக்கு என்பது போல ப்ளடி மேரி என்கிற கப்பல் கேப்டனாகவே பிரியங்கா சோப்ராவுக்கு ஒரு பாஸ்ட் கதை உள்ளது. மேலும், ஆக்ஷன் காட்சிகளில் எல்லாம் வில்லன் ஆட்களை அவர் புரட்டி எடுக்கும் விதமும் வில்லன் உடன் சண்டையிடும் காட்சிகளும் தனது குடும்பத்தை காப்பாற்ற போராடும் இடங்களிலும் ரொம்பவே உயிரை கொடுத்து நடித்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும்.
ஆனால், படத்தின் கதை மற்றும் திரைக்கதையில் எதுவுமே புதிதாக இல்லாத நிலையில் ரொம்பவே டல் அடிக்கிறது. ஆரம்பத்தில் ஒரு சில காட்சிகளில் அரை நிர்வாணமாக பிரியங்கா சோப்ரா நடித்துள்ளார். ஆக்ஷன் ரசிகர்களுக்கு தீனிப்போடும் படமாக இருந்தாலும் பெரிதாக படத்தில் சுவாரஸ்யம் இல்லாத நிலையில், பெரிய ஏமாற்றம் தான். ஆனால், இந்த வாரம் ஓடிடியில் பெரிதாக படங்கள் வராத நிலையில், அமேசான் பிரைம் ஓடிடி ரசிகர்கள் இந்த Bluff படத்தை ஒன் டைம் வாட்ச் போடலாம். தமிழ் டப்பிங்கில் உள்ளது. ஆபாச காட்சிகள் பெரிதாக எதுவும் இல்லை.