சென்னை: இயக்குநர் மகேஷ் நாராயணன் எழுதி, இயக்கி உருவான படம் பேட்ரியாட். படம் மே 1ஆம் தேதி வெளியாகி உள்ளது. படத்தில் மம்மூட்டி, மோகன்லால், ஃபகத் ஃபாசில், குஞ்சாக்கோ போபன், நயன்தாரா, ராஜீவ் மேனன், தர்ஷனா ராஜேந்திரன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். மலையாள திரையுலகின் பெரும் நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ள படம் எப்படி உள்ளது என்பது குறித்து பார்க்கலாம்.
படத்தின் கதையை பொறுத்தவரை மத்திய அமைச்சராக உள்ள ராஜீவ் மேனனின் மகன் ஃபகத் ஃபாசில், கல்வியில் சிறந்த ஏழைக் குழந்தைகளுக்கு லேப்டாப் இலவசமாக வழங்குகிறார். அதேபோல் நாடு முழுவதும் விற்பனையாகும் டிஜிட்டல் பொருட்களின் பயன்பாடுகளில் ரகசியமாக செயலிகளை பதிவேற்றம் செய்து, அனைவரது நடவடிக்கைகளையும் கவனிக்கின்றனர். அது செல்போனில் தொடங்கி, லேப்டாப், சிசிடிவி கேமரா என மொத்த இந்தியாவின் மின்னணு நடவடிக்கைகள் அனைத்தும் அவர்கள் கட்டுப்பாட்டில் தான்.
இது தொடர்பாக மத்திய அமைச்சராக உள்ள ரேவதிக்கு தெரியவர, அவர் இது தொடர்பாக விசாரணை செய்ய மம்மூட்டியை நியமிக்கிறார். அதன் பின்னர் அவர் கொல்லப்படுகிறார். அவரது கொலை இயற்கை மரணம் போல செட்டப் செய்யப்படுகிறது. இதைத் தெரிந்து கொண்ட மம்மூட்டி தனக்கு இந்தியாவில் பாதுகாப்பு இல்லை என்று, லண்டனுக்குச் செல்கிறார். லண்டனுக்குச் சென்று யூடியூப் சேனல் தொடங்கி, டிஜிட்டல் பொருட்கள் மூலம் நாம் எப்படி எல்லாம் கண்காணிக்கப்படுகிறோம் என்பது தொடர்பாக வீடியோக்களைப் பதிவிடுகிறார்.

கதை: இந்நிலையில் ஃபகத் ஃபாசிலுக்கு எதிரான மிகவும் வலிமையான ஆதாரங்கள் மம்மூட்டிக்கு கிடைக்க, அதன் மூலம் ஃபகத் ஃபாசிலுக்கு எதிரான நடவடிக்கைகளில் களமிறங்குகிறார் மம்மூட்டி. ஒரு கட்டத்தில் ஃபகத் ஃபாசில் மூலம் மம்மூட்டியின் உயிருக்கு ஆபத்து ஏற்படுகிறது. அதில் இருந்து அவர் எப்படி தப்பித்தார். ஃபகத் ஃபாசிலை சட்டத்தின் முன் நிறுத்தினாரா? இல்லையா? என்பது மீதிக்கதை.
திரைக்கதை: படத்தின் கதையான வித்தியாசமான அதே நேரத்தில் ஒரு விறுவிறுப்பான படத்திற்கான கதை தான். ஆனால் இந்த கதைக்கு ஏற்ற திரைக்கதை இல்லாததால் படம் முழுக்க ஆவரேஜ்ஜாகவே செல்கிறது. இடைவேளைக்கு முன்னர் ஒரு காட்சியும், இடைவேளைக்குப் பின்னர் ஒரு காட்சியும் என வெகு சில காட்சிகள் மட்டுமே மனதில் நிற்கும்படி உள்ளது.
மோகன்லால்: இடைவேளைக்குப் பின்னர் தான் மோகன்லாலும் நயன்தாராவும் வருகிறார்கள். நயன்தாரா வெகுசில காட்சிகளே வருகிறார். மோகன்லாலுக்கும் மம்மூட்டிக்கும் இருக்கும் முன்கதை நன்றாக இருக்கிறது. திரைக்கதையில் ஆங்காங்கே வேட்டையன் வாடையும் பின்னணி இசையில் ஆங்காங்கே பாகுபலி வாடையும் தூக்கலாகவே இருக்கிறது.

படம் எப்படி இருக்கு: ஒளிப்பதிவு, எடிட்டிங், நடிகர்களின் நடிப்பு என எல்லாமே சூப்பர் என்று கூறும் அளவுக்கு இருக்கிறது. ஆனால் விறுவிறுப்பான திரைக்கதை இல்லை, வில்லன் கதாபாத்திரம் வலுவானதாக இல்லாதது மொத்த படத்தையும் படுக்க வைத்து விடுகிறது. படம் முழுக்க மனதில் நிற்கும் படியான குறைந்தது 7 முதல் 8 சீன்கள் வைத்திருந்தாலே படத்தை தூக்கி நிறுத்தி இருக்கலாம். சில புத்திசாலித்தனமான காட்சிகள் கதையோட்டத்தை மையமாக கொண்டு உருவாக்கியது பாராட்டுக்குரியது. மோகன்லால் மற்றும் மம்மூட்டி ரசிகர்களுக்காக வைக்கப்பட்ட காட்சிகள் ரசனை. சண்டைக் காட்சிகள் அருமை. ஆனால் சன்னமான கதாபாத்திர வடிவமைப்பு படத்தை சுமாரான படமாக மாற்றி விட்டது. மொத்ததில் பேட்ரியாட் பார்த்து பார்த்து செய்து சொதப்பிய வேலைதான்.