இயக்குநர் கே.ஆர். வினோத் இயக்கத்தில் லெனின், ஆர்.வி. உதயகுமார், அஸ்மீன் நடிப்பில் இன்று "ரெட் லேபிள்" திரைப்படம் ஒரு பரபரப்பான கிரைம் சஸ்பென்ஸ் த்ரில்லர் படமாக திரையரங்குகளில் வெளியானது.
கல்லூரிப் பருவத்தில் அடிதடி, வழக்குகள் எனப் பல சிக்கல்களில் மாட்டிய நாயகன் லெனின், பிற்காலத்தில் அமைதியான வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்து, சாதாரண வாழ்க்கையையை வாழ்ந்து வருகிறார். அவருக்கு ஒரு காதலும் மலர்கிறது. ஆனால், தவிர்க்க முடியாத சூழலால் மீண்டும் அவரது கடந்த காலத்தின் நிழல் அவரைத் துரத்துகிறது.

ரெட் லேபிள் கதை
கல்லூரியில் நடக்கும் மாணவர் தலைவர் தேர்தல் அவரை மீண்டும் பழைய பாதைக்குத் தள்ளுகிறது. வன்முறையைத் தவிர்த்து அமைதியாகச் செல்ல நினைக்கும் லெனின், கல்லூரி வளாகத்திலேயே ஒரு கொலையைச் செய்துவிடுகிறார். ஏற்கெனவே வழக்குகள் இருந்ததால், இந்தக் கொலைக் குற்றமும் சேர்ந்தால் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும் என எண்ணி, தனது காதலி, ஒரு கல்லூரி மாணவியின் உதவியுடன் தப்பிக்கும் திட்டத்தை வகுக்கிறார்.
கொலை செய்யப்பட்டவரைக் கண்டுபிடிக்க காவல்துறையும், அவரது கூட்டாளிகளும் கல்லூரி வளாகத்துக்குள் நுழைகின்றனர். லெனின் தனது திட்டத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்தித் தப்பினாரா? யாரை, எதற்காகக் கொலை செய்தார்? என்ற பரபரப்பான கேள்விகளுக்குப் பதிலளிப்பதே 'ரெட் லேபிள்' திரைப்படம்.

படம் எப்படி இருக்கு?
நாயகன் லெனின், ஒரு அறிமுக நடிகர் எனத் தெரியாத அளவு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். கல்லூரி மாணவராகவும், கல்லூரிக்குப் பிறகுமான தோற்றத்திலும் நடிப்பிலும் அவர் காட்டிய வித்தியாசம், திரை மீது அவரது உழைப்பைப் பிரதிபலிக்கிறது.
நாயகி அஸ்மின், தனது தோற்றத்தை மீறி, அளவான நடிப்பின் மூலம் தனது பணியைச் சிறப்பாகச் செய்திருக்கிறார். திரைக்கதையில் ஒரு முக்கியப் பகுதியாகப் பயணித்து, ரசிகர்களின் மனதில் இடம்பிடிக்கிறார்.
இயக்குநர் ஆர்.வி. உதயகுமாரின் காமெடி கலந்த வில்லத்தனமான நடிப்பு படத்திற்குப் பலம் சேர்த்துள்ளது. முனீஷ்காந்த், அனுமோகன் ஆகியோரின் பங்களிப்பு காட்சிகள் குறைவாக இருப்பினும், தங்கள் நடிப்பால் படத்திற்கு ஓர் அங்கீகாரத்தை வழங்கியுள்ளனர்.
பிளஸ்
ஒற்றை லொக்கேஷனில் கதை நகர்ந்தபோதும், ஒளிப்பதிவாளர் சதீஷ் மெய்யப்பன் வெவ்வேறு கோணங்களில் காட்சிகளுக்கு விறுவிறுப்பைச் சேர்த்துள்ளார். கைலாஷ் மேனின் பாடல்களும் பின்னணி இசையும் கதையை வலுப்படுத்துகின்றன. லாரன்ஸ் கிஷோரின் நேர்த்தியான படத்தொகுப்பு, கதையை வேகமாகவும் சுவாரஸ்யமாகவும் நகர்த்திச் செல்கிறது.
பொன். பார்த்திபன், கல்லூரி வாழ்க்கை மற்றும் காதல் பின்னணியில் ஒரு கிரைம் சஸ்பென்ஸ் த்ரில்லரை நேர்த்தியாக எழுதியுள்ளார். பல திருப்பங்கள் மூலம் இறுதிவரை சுவாரஸ்யம் குறையாமல் திரைக்கதையை சிறப்பாகக் கையாண்டிருக்கிறார். அவரது எழுத்து படத்தின் முக்கிய பலமாக அமைந்துள்ளது.
இயக்குநர் கே.ஆர். வினோத், குறைந்த பட்ஜெட்டிலும், புதுமுகங்களைக் கொண்டும் படத்தை தொய்வின்றி நகர்த்திச் சென்றுள்ளார். நாயகன் கொலைக் குற்றத்திலிருந்து தப்பிக்க பிளான் போடும் காட்சிகள் இருக்கையின் நுனியில் அமரவைக்கின்றன. மேலும், ஒற்றைக் கல்லூரி சம்பவங்கள் என்றபோதும், எதிர்பார்க்காத திருப்பங்கள் மூலம் இரண்டாம் பாதி முழுவதையும் சுவாரஸ்யமாகக் கொண்டு சென்று, ஒரு சிறப்பான திரில்லர் அனுபவத்தை வழங்கியுள்ளார்.
மைனஸ்
இன்னமும் தெரிந்த நடிகர்களை வைத்து இந்த படத்தை கொஞ்சம் கூடுதல் பட்ஜெட்டில் எடுத்து இருந்தாலும் ஒரு நல்ல சஸ்பென்ஸ் த்ரில்லர் படமாகவே வந்திருக்கும். ஆனாலும், இயக்குநர் மற்றும் படக்குழுவின் கடுமையான முயற்சி படத்தை பார்க்க வைக்கிறது.