Happy Raj Review: ‘ஹாப்பி ராஜ்’ விமர்சனம்.

buzzhy avatar   
buzzhy
ஜி.வி. பிரகாஷ் குமார் எப்படியாவது ஒரு ஹிட் படத்தைக் கொடுத்துவிட வேண்டும் என தொடர்ந்து முயற்சித்து வரும் நிலையில், இந்த படம் அவருக்கு வெற்றிப் படமாக கண்டிப்பாக மாறும் என்றே தெரிகிறது...
Rating:
3.5/5
Star Cast: ஜி.வி. பிரகாஷ் குமார், ஜார்ஜ் மரியன், அப்பாஸ்
Director: மரியா ராஜா இளஞ்செழியன்

சென்னை: அறிமுக இயக்குநர் மரியா ராஜா இளஞ்செழியன் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் குமார், ஸ்ரீகெளரி ப்ரியா, அப்பாஸ், ஜார்ஜ் மரியான், மதுரை முத்து, கீதா கைலாசம் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள 'ஹாப்பி ராஜ்' (Happy Raj) திரைப்படம் வரும் மார்ச் 27ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. அதன் சிறப்பு திரையிடல் வெளியிடப்பட்ட நிலையில், படத்தின் விமர்சனம் குறித்து இங்கே பார்க்கலாம் வாங்க..

ஜி.வி. பிரகாஷ் குமார் எப்படியாவது ஒரு ஹிட் படத்தைக் கொடுத்துவிட வேண்டும் என தொடர்ந்து முயற்சித்து வரும் நிலையில், இந்த படம் அவருக்கு வெற்றிப் படமாக கண்டிப்பாக மாறும் என்றே தெரிகிறது.

 
Happy Raj Review in Tamil  GV Prakash Kumar and George Mariyan father son bonding is topnotch
Photo Credit:

படத்தில் உருவ கேலிக்கு எதிராகவும் இளைஞர்களுக்குள் இருக்கும் தாழ்வு மனப்பான்மை உள்ளிட்ட விஷயங்களை இயக்குநர் அழகாக போரடிக்காமல் கதையோட்டத்துடன் கருத்தாக சொல்லியுள்ள விதம் படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது. ஹாப்பி ராஜ் படத்தின் கதை, பிளஸ் மற்றும் மைனஸ் குறித்து விரிவாக இங்கே பார்க்கலாம்.

ஹாப்பி ராஜ் கதை: 'குதிரை முட்டை' வாத்தியார் என ஜார்ஜ் மரியனை ஊரே கேலி செய்ய அவருக்கு பிறக்கும் குழந்தைக்கு ஹாப்பி என்கிற ஆனந்த் ராஜ் என பெயர் வைத்து தனது மகனை ராஜா போலவே வளர்க்கிறார். ஆனால், தந்தையை குதிரை முட்டை என கிண்டல் செய்த ஊர் மக்கள் ஹாப்பி ராஜையும் சின்ன குதிரை முட்டை என கலாய்க்க ஆரம்பிக்கின்றனர். இதனால், அவருக்கு அந்த ஊரில் காதல் கூட செட்டாகவில்லை.

முதல் காட்சியிலேயே தலைவர் தம்பி தலைமையில் படத்தில் நடித்த பிரார்த்தனா நாதன் குதிரை முட்டை மருமகளாக முடியாது என்கிற காரணத்தை சொல்லியே ஹாப்பியின் காதலை பிரேக்கப் செய்கிறார்.

கோயமுத்தூரே வேண்டாம் வேற எங்கேயாவது வேலைக்குச் சென்று அங்கே ஒரு பெண்ணை காதலிக்க வேண்டும் என்கிற உயரிய லட்சியத்தில் பெங்களூருவுக்கு ஒரு ஐடி கம்பெனியில் வேலைக்குச் செல்லும் ஹாப்பி அங்கே ஹீரோயின் ஸ்ரீகெளரி ப்ரியாவை சந்திக்கிறார்.

இருவருக்கும் காதல் மலர அந்த காதலுக்கு இருவரது அப்பாக்களும் எப்படி பிரச்னையாக மாறுகின்றனர். கடைசியில் இருவரும் சேர்ந்தார்களா? இல்லையா? இயக்குநர் சொல்ல வந்த கருத்து என்ன? என்பது தான் மீதிக் கதை.

 
Happy Raj Review in Tamil  GV Prakash Kumar and George Mariyan father son bonding is topnotch
Photo Credit:

படம் எப்படி இருக்கு?: ஜி.வி. பிரகாஷ் இந்த படத்தில் ஹாப்பி ராஜாக நடிக்க ரொம்பவே முயற்சி செய்துள்ளார். முதல் சீனில் இருந்து பாதி படம் வரை அவரது அலப்பறைகள் தான். ஆனால், அவை எதுவுமே பெரிதாக ரசிகர்களை கனெக்ட் செய்யவில்லை. முதல் பாதியில் வரும் காட்சிகள் எல்லாமே கிரிஞ்ச் படத்திற்கு வந்து சிக்கிக் கொண்டோமா? என்கிற டவுட்டைத் தான் கிளப்பின.

காமெடி காட்சிகள் முதல் பாதியில் அதிகம் வைக்கப்பட்டாலும் அவை பெரிதாக சிரிப்பை ஏற்படுத்தவில்லை. ஸ்ரீகெளரி ப்ரியா தான் முதல் பாதி படத்தை பார்க்க வைக்க உதவுகிறார். அப்பாஸ் ஓபனிங் சீன் சிறப்பாக உள்ளது. படம் முழுக்க அவருடைய நடிப்பும் பக்கா தான்.

அம்மாவாக நடித்துள்ள கீதா கைலாசம் பெங்களூருக்குச் சென்று செய்யும் அலப்பறைகளும் அந்த "மலை மலை மருதமலை" பாடல் காட்சியில் இருந்து பிக்கப் ஆகும் படம் கடைசி வரை ஃபீல் குட் படத்தை பார்த்த திருப்தியை கொடுக்கிறது.

ஆரம்பத்தில் குதிரை முட்டை என கலாய்க்கப்படும் ஜார்ஜ் மரியன் பெங்களூருக்கு தனது சொந்தக்காரர்களுடன் அப்பாஸை பார்க்க வர அங்கே அவரை அசிங்கப்படுத்துகின்றனர். ஆனால், அதன் பின்னர் 2ம் பாதி முழுக்க ஜார்ஜ் மரியன் நடித்துள்ள நடிப்பு மற்றும் அவரை வைத்து இயக்குநர் சொல்லியிருக்கும் விஷயம் நிச்சயம் இன்றைய இளைஞர்களுக்கான பாடமாகவே மாறியுள்ளது. யாரடி நீ மோகினி படம் முதல் பாதி ஐடி கம்பெனி போர்ஷன், 2ம் பாதி கிராமத்து போர்ஷன் என எடுக்கப்பட்டு இருக்கும். அதே ட்ரீட்மெண்ட்டில் தான் இந்த படமும் உள்ளது.

 
Happy Raj Review in Tamil  GV Prakash Kumar and George Mariyan father son bonding is topnotch
Photo Credit:

பிளஸ்: ஜி.வி. பிரகாஷ், ஜார்ஜ் மரியன், அப்பாஸ், ஸ்ரீகெளரி ப்ரியா, கீதா கைலாசம் என முன்னணி நடிகர்களின் நடிப்பு மொத்தமும் படத்துக்கு பெரிய பிளஸ் ஆகவே உள்ளது. ஜஸ்டின் பிரபாகரனின் இசையில் "ஆடினே இருப்பேன்" பாடல் வைப் ஆக்குகிறது. பின்னணி இசை பெரிய பலமாக உள்ளது. பெங்களூர் மற்றும் கோவை அழகை அழகாக காட்டிய ஒளிப்பதிவாளர் மதன் கிறிஸ்டோபர் மொத்த படத்தையே கலர்ஃபுல்லாக கொடுத்துள்ளார். ஒரு போட்டோ எடுக்கும் ஷாட்டில் அப்பாஸ் மற்றும் ஜார்ஜ் மரியன் எதிர் எதிர் திசையில் அமர்ந்திருக்கும் காட்சி அழகு.

எடிட்டர் செல்வா ஆர்.கே. முதல் பாதியில் பல வேலைப்பாடுகளை செய்து போர் அடிக்காமல் காப்பாற்றியுள்ளார். சப்பாணியின் மகன் முழுசா பொறந்ததே பெரிய விஷயம். என் மகன் ஊனமா பொறக்காததால இன்னொரு குழந்தை கூட பெத்துக்கல போன்ற வசனங்களும் சிறு வயதில் ஹீரோவாக தெரியும் அப்பாக்கள், மகன்கள் வளர்ந்தவுடன் வில்லனாக தெரிவது ஏன்? என்கிற கேள்வியை எழுப்பியுள்ள விதமும் அதற்கு வைக்கப்பட்டுள்ள காட்சிகளும் அட்டகாசம். அந்த ரயில் காட்சியும் படத்திற்கு பெரிய பிளஸ்.

மைனஸ்: ஆரம்பத்திலேயே சொன்னது போல முதல் பாதி படத்தில் ஏகப்பட்ட குறைகள் உள்ளன. பல காமெடி காட்சிகள் சரியாக உட்காரவில்லை. ஹீரோவுக்கும் ஹீரோயினுக்கும் ஏற்படும் காதல் முதல் அதை புரபோஸ் செய்ய சிகரெட்டை பயன்படுத்திய விதம் என பல குறைகள் உள்ளன. ஆனால், அவையெல்லாம் 2ம் பாதியில் சொல்லப்பட்டுள்ள நல்ல கருத்துக்கள் மற்றும் முதல் பாதியில் கிரிஞ்சாக தெரிந்த காட்சிகளை எல்லாம் சரிகட்டியது என படம் கடைசியில் ரசிக்க வைத்து விட்டது. அப்பா மற்றும் மகன்கள் கொண்டாடும் வெற்றியாக இந்த படம் அமையும்.

没有找到评论