சென்னை: இயக்குநர் கிஷோர் பாண்டுரங் பெலேக்கர் இயக்கத்தில் விஜய் சேதுபதி, அதிதி ராவ் மற்றும் அரவிந்த் சாமி நடிப்பில் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள 'காந்தி டாக்ஸ்' திரைப்படம் மனிதர்களை விட இந்த உலகில் பணம் எப்படியெல்லாம் பேசுகிறது. அதனால் விளையும் நன்மைகளை விட தீமைகள் என்னென்ன? ஊழல் பெருகிக் கொண்டே போவதால் சாமானிய மக்கள் எப்படி பாதிக்கின்றனர் என பல விஷயங்களை இந்த காந்தி டாக்ஸ் பேசாமல் உரக்க பேசியுள்ளது.
கமர்ஷியல் படங்களை தாண்டி வித்தியாசமான கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களில் தொடர்ந்து விஜய் சேதுபதி நடிக்க முனைப்புக் காட்டி வருகிறார். நல்லா நடிக்க வேண்டும் என்றாலும் வட இந்திய இயக்குநர்களே விஜய் சேதுபதியை தேர்வு செய்யும் அளவுக்கு அவரது வளர்ச்சி எங்கேயோ போய்விட்டது.

அரவிந்த் சாமி, அதிதி ராவ் என நடிகர்களின் தேர்வும் வசனங்கள் இல்லாமல் நடிப்பால் ரசிகர்களை ஈர்க்க வைக்க வேண்டிய படத்துக்கு பெரிய பலமாக மாறி நிற்கும் நிலையில், இந்த வித்தியாசமான முயற்சி படமாக எந்தளவுக்கு கை கொடுத்தது என்பது குறித்த விரிவான விமர்சனத்தை இங்கே பார்க்கலாம் வாங்க..
காந்தி டாக்ஸ் கதை: "ரூபா நோட்டுல வாழுறாரு காந்தி.. வாய் நிறையா ஜோரா புன்னகையை ஏந்தி" என காதலா காதலா படத்தில் வரும் "காசுமேல காசு வந்து" பாடலில் பணத்தை பற்றிய விஷயங்கள் இடம்பெற்றிருக்கும். அதை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட கதையாகவே காந்தி டாக்ஸ் கதை உள்ளது. இல்லாதவனுக்கு பணம் எந்தளவுக்கு முக்கியம். இருப்பவனுக்கு அந்த பணம் எந்தளவுக்கு இம்சை. அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகளின் ஊழல் பணத்தை வைத்து எப்படி நடக்கிறது. அதனால், மக்கள் எப்படி பாதிக்கபடுகின்றனர் என்கிற கதையை தோலுரிக்கும் வசனங்களை வைத்து பாடம் எடுக்காமல், காட்சிகளின் வழியாக காட்ட முயன்றுள்ளார் இயக்குநர்.
உடல்நிலை முடியாத அம்மாவை வைத்துக் கொண்டு மும்பையில் ஏழ்மையான வாழ்க்கையை வாழ்ந்து வரும் விஜய் சேதுபதிக்கு பக்கத்து வீட்டு அதிதி ராவ் உடன் காதலும் ஏற்பட்டு விடுகிறது. அடுத்த கட்டத்துக்கு உயர வேண்டும் என்றால் நல்ல வேலை வேண்டும் என வேலை தேடி அலையும் இளைஞனாக விஜய் சேதுபதி நடித்துள்ளார். பெரும் பணக்காரரான அரவிந்த் சாமிக்கு அந்த பணம் மூலமே ஒரு பெரிய பிரச்னை வர இவர்கள் இருவரும் சந்திக்கும் இடமும் அதன் பின்னர் நடக்கும் டிராவலும் கடைசியில் என்ன ஆகிறது என்பதும் தான் இந்த படத்தின் கதை.

பிளஸ்: டைரக்டர் கிஷோர் வித்தியாசமான படத்தை இந்த 2026ல் கொடுத்தாலும் ரசிகர்கள் தியேட்டருக்கு வருவார்கள் என நினைத்தது. அதை தாண்டி அவர் விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, அதிதி ராவ் போன்ற நல்ல திறமையான நடிகர்களை கன்வின்ஸ் செய்து நடிக்க வைத்தது. ஏ.ஆர். ரஹ்மானின் இசை மற்றும் பாடல்கள் படத்திற்கு பெரிய பலமாக மாறியுள்ளது. காட்சிகள் வழியாக கதை சொல்ல வேண்டும் என்றால் இயக்குநர், இசையமைப்பாளரை விட ஒளிப்பதிவாளரின் பணி தான் ரொம்பவே சிக்கலானது. ஷோல்டர் ஷாட் காட்டி டயலாக் வைத்து சீனை நிரப்பி விட முடியாது. ஒளிப்பதிவாளர் கரண் பி. ராவத் தனது ஒட்டுமொத்த உழைப்பையும் கொட்டியிருப்பது தெளிவாகத் தெரிகிறது.
மைனஸ்: படத்தின் 2ம் பாதியில் இருக்கும் சுவாரஸ்யம் முதல் பாதியில் இல்லாமல் ஏற்கனவே பார்த்த கமல்ஹாசனின் பேசும் படத்தை மீண்டும் பல இடங்களில் நினைவுப்படுத்தும் விதமாகவே இந்த படம் உருவாகி இருப்பது பெரிய மைனஸ் ஆகவும் முதல் பாதி ரசிகர்களை சோர்வடையவும் செய்வது படத்துக்கு பலவீனமாக உள்ளது. விஜய் சேதுபதி அளவுக்கு அரவிந்த் சாமிக்கு பெரிய ஸ்கோப் கிடைக்காதது மைனஸ் தான். 2ம் பாதியை போல முதல் பாதியையும் விறுவிறுப்பாக கொடுத்திருந்தால் இந்த காந்தி டாக்ஸ் பல காந்தி நோட்டுகளை அள்ளியிருக்கும். சினிமா ரசனை கொண்ட ரசிகர்களை கண்டிப்பாக இந்த காந்தி டாக்ஸ் ஈர்க்கும்.