சென்னை: ஹோம்பலே தயாரிப்பு நிறுவனம் தயாரிப்பில் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்துள்ள காந்தாரா திரைப்படம் கண்டிப்பாக கர்நாடகாவின் பாகுபலி என்றும் பாகுபலி படத்துக்குப் பிறகு இப்படியொரு பிரம்மாண்ட இந்திய படைப்பு என்றும் சொல்லலாம். காந்தாரா முதல் பாகத்தை விட பல மடங்கு சிறப்பான படத்தை கொடுக்க வேண்டும் என்றும் அதில் இருந்த தெய்வீகத்தன்மை மேலும், பல மடங்கு கொடுக்க வேண்டும் என ரிஷப் ஷெட்டி போட்டுள்ள கடின உழைப்பு ஒவ்வொரு காட்சியிலும் தெரிகிறது.
அதிலும் கிளைமேக்ஸ் காட்சிகளில் எல்லாம் ரிஷப் ஷெட்டியின் மகாகாளி தேவி நடிப்பு பிரம்மிப்பின் உச்சமாகவே செல்கிறது. காந்தாரா படத்தை ரசிகர்கள் எதை எதிர்பார்த்து வருவார்களோ அவர்களை திருப்தி செய்ய அதற்கு மேல் கொடுக்கிறேன் என இப்படியொரு மொரட்டு ப்ரீக்வெல்லை கொடுத்த ரிஷப் ஷெட்டிக்கு தேசிய விருதே அவரது நடிப்புக்கு கொடுக்கலாம்.

பொன்னியின் செல்வன், கங்குவா உள்ளிட்ட படங்களை ரிஷப் ஷெட்டி கையில் கொடுத்திருந்தால் அவர் எந்தளவுக்கு அந்த கதைகளை திரையில் காட்சிப்படுத்தியிருப்பார் என்கிற அளவுக்கு யோசனைகள் எல்லாம் காந்தாரா சாப்டர் 1 படத்தை பார்க்கும் போது எழத்தான் செய்கிறது. வாங்க முழு விமர்சனத்தையும் படத்தின் நிறை குறைகளையும் பார்க்கலாம்..
காந்தாரா சாப்டர் 1 கதை: பஞ்சுருளி வேடமிட்டு நடனமாடிய தனது அப்பா இந்த இடத்தில் ஏன் மறைந்தார் என சிறுவன் கேட்கும் இடத்தில் இருந்து முதல் பாக கனெக்ஷனை ஆரம்பித்து அப்படியே காந்தாராவின் புராண கதைக்கு படம் பயணிக்கிறது. காந்தாரா மக்கள் கார்னிகா கல்லை எடுத்து வழிபடுவதை பார்க்கும் அரசன் ஈஸ்வர பூந்தோட்டத்தை அடைய பேராசை கொள்ள காந்தாரா காட்டுக்குள் செல்கிறார். ஆனால், அங்குள்ள மாய சக்தி அரசனையும் மற்ற படை வீரர்களையும் அழிக்க ஆரம்பிக்க அரசனின் வாரிசு மட்டும் தப்பிக்கிறான்.
அரசனாக வளரும் ராஜா விஜயேந்திரனுக்கு(ஜெயராம்) ஒரு ஆண் குழந்தையும் ஒரு பெண் குழந்தையும் பிறக்கிறது. காந்தாரா பக்கம் பிரம்மராட்சதர்கள் உள்ளார்கள் என்றும் அந்த பக்கம் யாருமே போக கூடாது என வாழ்ந்து வருகின்றனர். தான் நல்லா இருக்கும் போதே தனது மகன் குலசேகரனுக்கு (குல்ஷன் தேவைய்யா) மன்னர் முடி சூடுகிறார். முடி சூடிய உடனே வேட்டைக்கு செல்ல வேண்டும் என தனது தாத்தாவின் கதைகளை கேட்டு வளர்ந்த குலசேகரன் காந்தாரா காட்டுக்குச் செல்ல அங்கு வசித்து வரும் பழங்குடியின மக்கள் அவர்களை பிரம்மராட்சஷர்கள் போல வேட்டையாட அரசன் தெறித்து ஓடி வந்துவிடுகிறான்.
அவர்கள் கைது செய்யும் ஒரு போர் வீரனை வைத்துக் கொண்டு ஹீரோ பெர்மி (ரிஷப் ஷெட்டி) நாட்டுக்கு வர அங்கே இளவரசி கனகவதியை (ருக்மணி வசந்த்) சந்திக்கிறான். காந்தாரா ஆட்கள் நம்மிடத்துக்குள் நுழைந்த விட்டதை அறிந்துக் கொள்ளும் குலசேகரன் தனது படையுடன் காந்தாரா காட்டுக்குள் சென்று அங்குள்ள மக்களை அழிக்க ஹீரோ தெய்வ சக்தியின் துணையோடு இந்த அரசனை எதிர்த்தாரா? ஹீரோவும் ஹீரோயினும் சேர்ந்தார்களா? இல்லையா? காந்தாராவை காவல் காக்கும் கடவுள்களுக்கும் தீய சக்திக்கும் இடையேயான போர் எப்படி முடிகிறது என்பது தான் இந்த காந்தாரா படத்தின் கதை.

படம் எப்படி இருக்கு: ஆக்ஷன் காட்சிகளில் கேமரா வொர்க் மற்றும் ஸ்டன்ட் வொர்க் எங்கேயும் கண் சிமிட்ட விடாமல் படுவேகமாக சென்று அனல் பறக்கிறது. ரிஷப் ஷெட்டி ஊருக்குள் வந்து ஹீரோயினை சந்திக்கும் காட்சியில் இடம் பெறும் தேர் சீன் மற்றும் அதே பாணியில் வரும் குதிரை சீன் இரண்டுமே சிறப்பு. காந்தாரா காட்டை பார்த்து பயப்படும் ஜெயராம் கிளைமேக்ஸில் எடுக்கும் அவதாரம், யாருமே எதிர்பாராத வில்லனுடைய ட்விஸ்ட் காட்சிகள் கச்சிதம்.
படத்தின் முதல் பாதியில் இடம்பெறும் சில காமெடி காட்சிகளும் நல்லாவே வொர்க்கவுட் ஆகியுள்ளன.குலசேகரனாக நடித்துள்ள குல்ஷன் தேவைய்யாவின் நடிப்பு மற்றும் ருக்மணி வசந்தின் நடிப்பு ரசிகர்களின் புருவங்களை உயர்த்துகிறது. கடவுள் கணங்களை அனுப்பி காந்தாரா மக்களை காப்பார் என நம்புவதும் வஞ்சகம் செய்து அந்த கணங்களின் சக்தியை சிறை பிடித்து பிரம்மாண்ட கோயில் எழுப்ப அரசாட்சியில் இருப்பவர்கள் செய்யும் சூழ்ச்சிகளும் என கடைசி வரை படம் ரசிகர்களை வியப்பின் உச்சிக்கே கொண்டு செல்கிறது.
பிளஸ்: அரவிந்த் எஸ். கஷ்யப்பின் ஒளிப்பதிவு காந்தாரா காட்டின் அமானுஷ்யங்களை படம் பிடித்த விதம் முதல் பாகத்தில் கொடுத்த அதே த்ரில் உணர்வை அப்படியே கடத்துகிறது. காந்தாரா மக்கள் காட்டு கத்தல் கத்தினாலும் அதை அஜனீஷ் லோக்நாத் தனது திறமையான இசையால் கட்டுப்படுத்தி ரசிகர்களின் காதுகளை பஞ்சர் ஆக்காமல் ரசிக்க வைத்ததே படத்திற்கு பெரிய பலம். ரிஷப் ஷெட்டி ஆரம்பத்தில் இருந்தே செய்யும் சேட்டைகளும், கடைசியில் அவர் எடுக்கும் காளி தேவி அவதாரமும் கண்டிப்பாக படத்தை பார்க்க வைத்து மெகா பிளாக்பஸ்டர் ஆக்கிவிடும். ஜெயராம், ருக்மணி வசந்த், குல்ஷன் தேவைய்யா என முக்கிய கதாபாத்திரங்களின் பங்களிப்பு படத்திற்கு பெரிய பலம். கதை சொல்லிய விதத்திலும், காட்சிகளை ஸ்டேஜிங் பண்ண அழகிலும் இயக்குநராக அசத்தியிருக்கிறார் ரிஷப் ஷெட்டி. அந்த புலி சீன், தேவாங்குகள் காட்சியெல்லாம் ஹாலிவுட் லெவல் மேக்கிங். தமிழில் ரிஷப் ஷெட்டிக்கு மணிகண்டன் பேசியுள்ள டப்பிங் வேறலெவல்.
மைனஸ்: முதல் பாதியில் சில ஃபில்லர்ஸ் மற்றும் ரிப்பீட்டட் சீன்ஸ் இடம்பெறுவது போன்ற எண்ணம் தோன்றுகிறது. கிளைமேக்ஸில் நடைபெறும் அந்த போர்க் காட்சிகளை இன்னமும் சிறப்பாக எடுத்திருக்கலாம். ஆனால், தெய்வ சக்தியை வைத்து விளையாடிய இடங்கள் எல்லாம் லாஜிக் இல்லா மேஜிக் தான். கண்டிப்பாக தியேட்டரில் பார்க்க வேண்டிய படமாக காந்தாரா சாப்டர் 1 பிரம்மாண்டமாக உள்ளது. அடுத்த பார்ட்டுக்கான லீடு கொடுத்துள்ள விதமும் அட்டகாசம்.