Dude Review

buzzhy avatar   
buzzhy
வெளியூருக்கு படிக்கச் செல்லும் குறள் மீது திடீரென காதல் வர, மாமாவான சரத்குமாரிடம் சொல்ல தடபுடலாக திருமண ஏற்பாடுகள் நடைபெறுகிறது. மீண்டும் காதலியை காண செல்லும் இடத்தில் அவள் தற்கொலை முயற்சி செய்ய திரும..
Star Cast: பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜு
Director: கீர்த்தீஸ்வரன்

 

சென்னை: மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜு, சரத்குமார், ரோகிணி, டிராவிட் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள டியூட் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியானது. பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான லவ் டுடே படத்தை விட இந்த ஆண்டு வெளியான டிராகன் படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நிலையில், சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.

 

ஹாட்ரிக் வெற்றியை டியூட் படத்தின் மூலம் பிரதீப் ரங்கநாதன் பெறுவாரா என்கிற எதிர்பார்ப்பு மற்றும் தீபாவளி ரிலீஸ் என ஓவர் ஹைப்புடன் வெளியான டியூட் திரைப்படம் ரொம்பவே ஏமாற்றிவிட்டது.

 
Dude Review in Tamil  Pradeep Ranganathan s Gen Z cringe fest testing our patience
Photo Credit:

ஜென் ஸி தலைமுறையினருக்கான படமாக டியூட் படத்தை கீர்த்தீஸ்வரன் இயக்க நினைத்ததில் எந்தவொரு தவறும் இல்லை. ஆனால், அபூர்வ சகோதரர்கள், ஷாஜகான் படங்களின் சாயல்களுடன் கொஞ்சம் ஆணவக் கொலையை இலவச இணைப்பாக இணைத்து கொடுத்தது போலவே டியூட் படம் உள்ளது.

டியூட் கதை: அயலான் படத்தில் சிவகார்த்திகேயன், காந்தி கண்ணாடி படத்தில் கேபிஒய் பாலா எப்படி சர்ப்ரைஸ் பண்ணும் வேலையை பார்ப்பார்களோ அப்படியொரு வேலையை பார்த்து வருகிறார் அகன் (பிரதீப் ரங்கநாதன்). பால்வளத்துறை அமைச்சரான அதியமான் அழகப்பனின் (சரத்குமார்) மகள் தான் குறள் (மமிதா பைஜு). சரத்குமாரின் சகோதரி மகன் தான் ஹீரோ. மமிதா பைஜு காதலை சொல்லும் போது நட்பாக பழகியதால் ஃபீலிங்ஸ் இல்லை என ஒதுக்கும் பிரதீப் ரங்கநாதன் மமிதா மீது ஃபீலிங்ஸ் வர அவர் இன்னொருவரை காதலிக்க அந்த காதலுக்கு அப்பா சரத்குமார் வில்லனாக மாற காதலியை அவளுடைய காதலனுடன் சேர்க்க பிரதீப் ரங்கநாதன் எடுக்கும் விபரீத முடிவும் அதன் பின் விளைவுகளும் தான் இந்த படம்.

படம் எப்படி இருக்கு?: ஆரம்பத்தில் தனது முன்னாள் காதலியின் திருமணத்துக்கு செல்லும் அகன் அங்கே மணப்பெண்ணின் தாலியை அறுத்துவிட ஒட்டுமொத்த கல்யாண கும்பலும் அகனை அடித்து மிதித்து போலீஸில் ஒப்படைக்கின்றனர். அவரை ஜாமீனில் விடுவிக்க வரும் குறள் அகனுக்கு மெட்ரோ ரயிலில் சர்ப்ரைஸ் ஆக காதலை சொல்ல அவர் அதை வேண்டாம் என சொல்லி குறளை அழ வைக்கிறார்.

வெளியூருக்கு படிக்கச் செல்லும் குறள் மீது திடீரென காதல் வர, மாமாவான சரத்குமாரிடம் சொல்ல தடபுடலாக திருமண ஏற்பாடுகள் நடைபெறுகிறது. மீண்டும் காதலியை காண செல்லும் இடத்தில் அவள் தற்கொலை முயற்சி செய்ய திருமணத்தை நிறுத்த பிளான் போடுகின்றனர். ஆனால், குறளின் அப்பாவான அதியமானுக்கு விஷயம் தெரிந்தால் நடப்பதே வேறு என்பதை புரிந்துக் கொள்ளும் இவர்கள் வித்தியாசமான ஐடியாவுடன் திருமணத்தை செய்துக் கொள்கின்றனர்.

 
Dude Review in Tamil  Pradeep Ranganathan s Gen Z cringe fest testing our patience
Photo Credit:

அதன் பின்னர், காதலியின் விருப்பத்திற்கு ஏற்ப அவளுடைய காதலுடன் சேர்க்க ஹீரோ செய்யும் தியாகங்கள், ஒரு கட்டத்தில் அது தெரிய வர நடக்கும் சம்பவங்கள் என இரண்டாம் பாதி இடியாப்ப சிக்கலாக செல்கிறது. படத்தின் ஆரம்பத்தில் இருந்து கடைசி வரை பிரதீப் ரங்கநாதனின் நடிப்பு மற்றும் எனர்ஜி தான் படத்தை போரடிக்காமல் பார்க்க வைக்கிறது.

சரத்குமாரின் துள்ளலான நடிப்பும் அவரது இன்னொரு முகம் என மனுஷன் கொடுத்த வேலையை கடைசி வரை கச்சிதமாக செய்து மிரட்டி விட்டுட்டார். மமிதா பைஜு முதல் பாடல் காட்சி வரைக்கும் அழகாக தெரிந்த நிலையில், அதன் பின்னர் அவரது கதாபாத்திரம் ரொம்பவே டம்மியாக்கப்பட்டது தான் மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுத்து விட்டது. ஒரு கட்டத்தில், அவருக்கும் ஸ்கோப் கொடுக்கிறோம் என்கிற பெயரில் செய்யும் க்ரிஞ்ச் ஃபெஸ்ட் எல்லாம் ஒட்டவே ஒட்டல.

பிளஸ்: பிரதீப் ரங்கநாதனின் நடிப்பு தான் ஒட்டுமொத்த படத்துக்கும் பெரிய பலம். அவரை தாண்டி சாய் அபயங்கரின் இசையில் இடம்பெற்ற "அலையே அலையே" பாடல், "நல்லா இரு போ" பாடல்கள் நல்லா இருக்கு. பின்னணி இசை பக்காவாக கடைசி வரை படத்தின் டெம்போ குறைந்தாலும் தூக்கி நிறுத்தும் வேலையை செய்துள்ளது. நிக்கெத் பொம்மியின் ஒளிப்பதிவு, பரத் விக்ரமின் எடிட்டிங் படத்திற்கு கூடுதல் பலம். சிகரெட்டுக்கு பதில் சாக்லேட் சாப்பிடும் இடம், திருமண காட்சிகள், பிரசவ வார்டு சீன் என முதல் பாதி படமே ரசிகர்களை திருப்தி படுத்துவிடுகிறது. கடைசியாக ஆணவக் கொலைக்கு எதிராக பிரதீப் ரங்கநாதன் பேசும் வசனம் சிறப்பு.

மைனஸ்: இடைவேளை வரை படம் கொஞ்சம் ஜாலியாகவே சென்றாலும், 2ம் பாதியில் "உன்ன நெனச்சேன் பாட்டு படிச்சேன் தங்கமே ஞான தங்கமே" என பிரதீப் ரங்கநாதன் பாடாத குறை தான். ஃபேக் மேரேஜ், ஆணவக் கொலை, ஜென் ஸி லவ்வர் என க்ரிஞ்ச் ஃபெஸ்ட்டாகவே படம் உள்ளது. காதலனை பிரிந்து 6 மாதம் படிக்கச் சென்ற இடத்தில் இன்னொரு லவ் எல்லாம் உடனடியாக செட்டாவது, யாரை லவ் பண்றேன் தெரியல, ஒரே கன்ஃபியூசனா இருக்கு என பெண்களை வீக்காக காட்டியிருப்பது மைனஸ் ஆக மாறியுள்ளது. லவ் டுடே, டிராகன் படங்கள் அளவுக்கு எதிர்பார்த்து வந்தால் நிச்சயம் ஏமாற்றம் தான். இந்த தீபாவளிக்கு ஜாலியாக ஜென் ஸி அலப்பறைகளை பார்க்க நினைத்தால் தாராளமாக தியேட்டரில் ஒருமுறை ட்ரை பண்ணலாம்.

No comments found