சென்னை: பார்க்கிங், லப்பர் பந்து படங்களின் வெற்றிக்குப் பிறகு ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாகியுள்ள 'டீசல்' திரைப்படம் இன்று வெளியானது. தனது வழக்கமான பாணியிலிருந்து விலகி, 'டீசல்' திரைப்படத்தில் ஒரு புதிய களத்திற்குள் அடியெடுத்து வைத்துள்ளார். கச்சா எண்ணெய் உலகில் உள்ள பிரச்சனைகளையும், குழாய்கள் (பைப்லைன்) நிலத்தின் வழியாகச் செல்லும்போது மீனவர்கள் எதிர்கொள்ளும் கஷ்டங்களையும் இப்படம் பேசுகிறது.
ஆரம்பத்தில் பிரச்சனைகளை விளக்கும் படம், பின்னர் ஹரிஷ் கல்யாண் ஏற்று நடித்த வாசுவின் கதாபாத்திரத்தின் சுவாரஸ்யமான பக்கத்திற்குள் பயணிக்கிறது. கச்சா எண்ணெய் கடத்தல் வலையமைப்பை வழிநடத்தும் ஒரு இளைஞனாக வாசு இதில் நடித்து ஆக்ஷன் ஹீரோ அவதாரம் எடுத்துள்ளார்.

பல்வேறு பின்னணிகளைக் கொண்ட பல கதாபாத்திரங்கள் படத்தில் இடம்பெறுகின்றன. முதல் பாதி அவர்களின் முகங்களைப் பதிவு செய்வதிலும், அதுல்யாவுடனான காதல் காட்சிகளுடன் டிராக் மாறி செல்ல இரண்டாவது பாதி கத்தி படத்தை பல இடங்களில் நினைவுப்படுத்தும் இடத்தில் சறுக்கி விடுகிறது. டீசல் படத்தின் விரிவான விமர்சனத்தை இங்கே பார்க்கலாம் வாங்க..
டீசல் கதை: வடசென்னை பகுதியில் மணலி வரை கச்சா எண்ணெய் பைப்லைன் கொண்டு வரும் நிலையில், அது மீனவர்களின் வாழ்வாதாரத்தையே கேள்விக்குறியாக்கும் என போராட்டங்கள் வெடிக்கின்றன. ஆனால், அதிகார பலம் அவர்களை அடக்க, கச்சா எண்ணெய்யை கடத்தி மக்களுக்கு டீசல் வியாபாரம் செய்யும் பணியை சாய் குமார் மேற்கொள்கிறார். அவரது வளர்ப்பு மகனான ஹரிஷ் கல்யாணும் இதை தொடர, விவேக் பிரசன்னா நாங்களும் கடத்தி பிசினஸ் பண்ணுவோம் என பிரச்சனையை கிளப்ப வெடிக்கும் ஈகோ கிளாஷ் காரணமாக கடைசியில் என்ன ஆகிறது என்பது தான் டீசல் படத்தின் கதை.

படம் எப்படி இருக்கு?: ஹரிஷ் கல்யாண் இந்த டீசல் படத்தில் பக்கா கமர்ஷியல் ஹீரோவாகவும் ஆக்ஷன் ஹீரோவாகவும் மாற முயற்சித்துள்ளார். அதற்கான ஒட்டுமொத்த உழைப்பையும் கொட்டியுள்ளார். முதல் பாதியில் கதையை ஆரம்பித்து விட்டு படம் லவ் டிராக்கை நோக்கி நகர அதுல்யாவின் போர்ஷன் எல்லாம் பெரிதாக கை கொடுக்காமல் படத்துக்கு சிக்கலாக மாறி நிற்கிறது.
இரண்டாம் பாதி, கதாபாத்திரங்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள், வாசு தனது அறிவையும் வலிமையையும் பயன்படுத்தி எப்படி மீண்டும் கேமுக்குள் வருகிறார், தனது நட்பு மற்றும் குடும்ப பிரச்சனைகளை எப்படி தீர்க்கிறார், மற்றும் காவல்துறை மற்றும் அரசாங்கத்துடனான தனது மோதல்களை எப்படி சமாளிக்கிறார் என்பதை விவரிக்கிறது.
'டீசல்' ஒரு சுவாரஸ்யமான கதைக்களத்தைக் கொண்டிருந்தாலும், அதை ஒரு பொழுதுபோக்கு படமாக மாற்றியிருக்கலாம். இயக்குநர் சண்முகம் முத்துசாமி தேர்ந்தெடுத்த வழி படத்தின் ஓட்டத்தை பாதித்து அதன் தரத்தைக் குறைக்கிறது.
அதிகமான கதாபாத்திரங்களுக்கு மத்தியில், ஹரிஷ் கல்யாண் மீது அதிக சுமை சுமத்தப்பட்டுள்ளதால், படத்தின் ஒட்டுமொத்த தாக்கமும் குறைகிறது. இருப்பினும், சில உண்மையான சம்பவங்கள் தொடர்பான சுவாரஸ்யமான விவரங்களை படம் சேர்த்திருப்பது ஆறுதல் அளிக்கிறது.
பிளஸ்: திபு நினன் தாமஸின் இசை படத்தின் ஒரு முக்கிய அம்சம். பாடல்கள் அனைத்தும் சிறப்பாக அமைந்துள்ளன, பின்னணி இசையையும் அவர் நேர்த்தியாகக் கையாண்டுள்ளார். ஹரிஷ் கல்யாண், வினய், பதான் கதாபாத்திரத்தில் நடித்துள்ள சச்சின் கடேக்கரின் கதாபாத்திரம் என படத்துக்கு நடிகர்களின் நடிப்பு சிறப்பாக அமைந்துள்ளது.
மைனஸ்: இருப்பினும், மற்றபடி படம் தொழில்நுட்ப ரீதியாக சிறப்பாக இல்லை, சில இடங்களில் ரொம்ப பழைய டெம்பிளேட் அப்படியே தெரிகிறது. மொத்தத்தில், ஹரிஷ் கல்யாணின் சிறப்பான மற்றும் நேர்மையான நடிப்பால், 'டீசல்' ஒருமுறை பார்க்கக்கூடிய படமாக உள்ளது. ரசிகர்களை கவரும் விதமான காட்சிகளை படத்தில் அதிகம் வைத்திருந்தால் இந்த டீசல் மிகப்பெரிய படமாக மாறியிருக்கும்.