ஆரம்ப காலத்தில் ‘மாயா மச்சீந்திரா’ என்ற படத்தின் படப்பிடிப்புக்காக என்.எஸ்.கிருஷ்ணனும் எம்.ஜி.ஆரும் கொல்கத்தா சென்றனர். படப்பிடிப்புக்கு இடையே கொல்கத்தாவை சுற்றிப் பார்க்க படக்குழுவினர் புறப்பட்டனர். அப்போது ஓரிடத்தில் ஓடை ஒன்று குறுக்கிட்டது. படப்பிடிப்பு குழுவினர் ஓடையில் இறங்கி கடக்கும்போது, எம்.ஜி.ஆர். தனக்கே உரிய துடிப்போடு அந்த ஆறடி அகலமுள்ள ஓடையை ஒரே தாண்டாக தாண்டி குதித்து விட்டார். அப்படி தாண்டிக் குதித்ததில் அவரது செருப்பு ஒன்று அறுந்துவிட்டது.

உடனே, என்.எஸ்.கிருஷ்ணனிடம் எம்.ஜி.ஆர். ‘‘வாங்கண்ணே, புது செருப்பு வாங்கி வரலாம்’’ என்று கூறியிருக்கிறார். அதற்கு ‘‘இன்று நேரமாகிவிட்டது. நாளை செல்லலாம்’’ என்று பதிலளித்தார் கிருஷ்ணன். மறுநாள் காலை எம்.ஜி.ஆர். மீண்டும் வந்து நினைவுபடுத்திய போது, அவரது கையில் ஒரு பார்சலை திணித்தார் கிருஷ்ணன். அதை எம்.ஜி.ஆர். ஆவலோடு பிரித்து பார்த்தார். உள்ளே, அவரது பழைய செருப்பு. ‘‘என்னண்ணே, புது செருப்பு வாங்கலாம்னு கூப்பிட்டா, பழைய செருப்பையே கொடுக்கறீங்க?’’ என்ற எம்.ஜி.ஆரை தீர்க்கமாக பார்த்தபடி பதிலளித்தார் என்.எஸ்.கிருஷ்ணன்.

‘‘உன்னையும் உங்க அண்ணன் எம்.ஜி.சக்ரபாணியையும் நாடகத்தில் நடிக்க உங்க அம்மா அனுப்பிவெச்சது பணம் சம்பாதிக்கத்தான். பழைய செருப்பு நல்லாத்தான் இருக்கு. அதை நான் தைச்சு வெச்சுட்டேன்’’ என்று சொன்ன கிருஷ்ணனின் அன்பில் எம்.ஜி.ஆர். நெகிழ்ந்துபோய்விட்டார்.

தனக்கு ஆசான் போல இருந்த என்.எஸ்.கிருஷ்ணன், கடைசி காலத்தில் வறுமையால் வாடி நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில் அவருக்கு நிறைய உதவிகளை எம்.ஜி.ஆர். செய்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த என்.எஸ்.கிருஷ்ணனை எம்.ஜி.ஆர். சென்று பார்த்தார். யாரிடமும் எந்த உதவியும் கேட்க மாட்டார் கிருஷ்ணன். அதற்காக எம்.ஜி.ஆர். சும்மா இருந்து விடுவாரா? அவரால் கொடுக்காமல் இருக்க முடியாதே? என்.எஸ்.கிருஷ்ணன் படுத்துக் கொண்டிருந்த கட்டிலில் தலையணைக்கு அடியில் பணக்கட்டுகளை வைத்துவிட்டு வருவார் எம்.ஜி.ஆர்.

என்.எஸ்.கிருஷ்ணன் மறைந்த பின் நாகர்கோயிலில் அவரது வீடு ஏலத்துக்கு வந்தபோது அதை மீட்டு மீண்டும் அவர்கள் குடும்பத்தினருக்கே எம்.ஜி.ஆர். கொடுத்தார். அவரது குடும்பத்தையே எம்.ஜி.ஆர். தத்தெடுத்துக் கொண்டார் என்று சொல்லலாம். என்.எஸ்.கிருஷ்ணனின் பிள்ளைகள் எல்லாரையும் படிக்க வைத்தார். அவரது மகள் திருமணத்தை தனது சொந்த செலவில் நடத்தி வைத்தார்.

‘சக்கரவர்த்தி திருமகள்’ படத்தில் எம்.ஜி.ஆருடன் என்.எஸ்.கிருஷ்ணனும் நடித்தார். ஆரம்பத்தில் இருவருக்கும் போட்டி பாட்டு ஒன்று இருக்கும். அதிலே பல அரிய கருத்துக்கள் கேள்வி பதில் பாணியில் அமைந்திருக்கும்.

என்.எஸ்.கிருஷ்ணனை பார்த்து எம்.ஜி.ஆர். கேட்கும் ஒரு கேள்வி..

‘‘புகையும் நெருப்பில்லாமல் எரிவது எது?’’

பதில் சொல்லத் தெரியாமல் என்.எஸ்.கிருஷ்ணன் தவிப்பதை தொடர்ந்து எம்.ஜி.ஆரே பதிலளிப்பார்...

‘‘பசித்து வாடும் மக்கள் வயிறு அது...”

உடனே, ‘‘சரிதான் சரிதான்....’’ என்று ஆமோதிப்பார் என்.எஸ்.கிருஷ்ணன்.

புகையும் நெருப்பும் இல்லாமல் பசியால் எரிந்த ஆயிரக்கணக்கான வயிறுகளை உணவு என்னும் தண்ணீர் ஊற்றி குளிர்வித்தவர் எம்.ஜி.ஆர்....

image
  • Like
  • Love
  • HaHa
  • WoW
  • Sad
  • Angry