Year ender 2024 | தமிழ் சினிமாவில் இந்த ஆண்டு எதிர்பாராத படங்களின் வெற்றி ஆண்டாக அமைந்துள்ளது. எதிர்பார்த்த பல உச்ச நட்சத்திரங்களின் படங்கள் பாக்ஸ் ஆஃபீஸில் பின்னடைவை சந்தித்த நிலையில், சிறு பட்ஜெட் படங்கள் முத்திரை பதித்துள்ளன. உதாரணமாக ‘இந்தியன் 2’, ‘கங்குவா’ படங்கள் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தன. ஆனால் அந்தப் படங்கள் பாக்ஸ் ஆஃபீஸில் பெரிய அளவில் சோபிக்கவில்லை. ஆனால், ‘அமரன்’, ‘மகாராஜா’ போன்ற படங்கள் பாக்ஸ் ஆஃபீஸில் தனித்த முத்திரை பதித்துள்ளன. ரஜினியின் ‘வேட்டையன்’ அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஆனால், பெரிய அளவில் பாக்ஸ் ஆஃபீஸில் வசூல் குவிக்கவில்லை. அந்த வகையில் இந்த ஆண்டின் டாப் 10 பாக்ஸ் ஆஃபீஸ் வசூல் குவித்த படங்கள் குறித்து பார்ப்போம்.
- 4-MIN READ | News18 Tamil Tamil Nadu
Last Updated :December 30, 2024, 5:41 PM IST Published by
Lakshmanan G
01
தமிழ் சினிமாவில் இந்த ஆண்டு எதிர்பாராத படங்களின் வெற்றி ஆண்டாக அமைந்துள்ளது. எதிர்பார்த்த பல உச்ச நட்சத்திரங்களின் படங்கள் பாக்ஸ் ஆஃபீஸில் பின்னடைவை சந்தித்த நிலையில், சிறு பட்ஜெட் படங்கள் முத்திரை பதித்துள்ளன. உதாரணமாக ‘இந்தியன் 2’, ‘கங்குவா’ படங்கள் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தன. ஆனால் அந்தப் படங்கள் பாக்ஸ் ஆஃபீஸில் பெரிய அளவில் சோபிக்கவில்லை. ஆனால், ‘அமரன்’, ‘மகாராஜா’ போன்ற படங்கள் பாக்ஸ் ஆஃபீஸில் தனித்த முத்திரை பதித்துள்ளன. ரஜினியின் ‘வேட்டையன்’ அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஆனால், பெரிய அளவில் பாக்ஸ் ஆஃபீஸில் வசூல் குவிக்கவில்லை. அந்த வகையில் இந்த ஆண்டின் டாப் 10 பாக்ஸ் ஆஃபீஸ் வசூல் குவித்த படங்கள் குறித்து பார்ப்போம்.
02
தி கோட்: வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த செப்டம்பர் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’. இந்தப் படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, மோகன், மீனாட்சி சவுத்ரி, ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். அப்பா - மகன் என்ற இரண்டு கதாபாத்திரங்களில் விஜய் நடித்தார். படம் வெளியாகி ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்றது. போர் அடிக்காத திரைக்கதை ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. படத்தை அர்ச்சனா கல்பாத்தி தயாரித்தார். கிட்டத்தட்ட ரூ.400 கோடி பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படும் இப்படம் உலக அளவில் மொத்தமாக ரூ. 450 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில், இந்த ஆண்டில் அதிக வசூலை குவித்த படங்களின் பட்டியலில் விஜய்யின் ‘தி கோட்’ முதலிடத்தை பிடித்துள்ளது.
03
அமரன்: ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் தீபாவளியை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியான படம் ‘அமரன்’. மறைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு உருவான இப்படத்தில் சாய் பல்லவி, முகுந்தின் மனைவியான இந்து ரெபேகா வர்கீஸ் கதாபாத்திரத்தில் அழுத்தமான நடிப்பை பதிவு செய்தார். ஜி.வி.பிரகாஷ் இசையில் உருவான இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்தது. எமோஷனலாக கதைக்களம் பார்வையாளர்களை கவர்ந்தது. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற இந்தப் படம் ரூ.350 கோடி வசூலை ஈட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது. படத்தின் பட்ஜெட் ரூ.200 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. சிவகார்த்திகேயனின் திரையுலக வாழ்வில் அதிகபட்ச வசூலை குவித்த படம் என்ற சாதனையை இப்படம் பெற்றுள்ளது.
04
வேட்டையன்: த.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த அக்டோபர் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ‘வேட்டையன்’. இந்தப் படத்தில் அமிதாப் பச்சன், பகத் பாசில், ராணா, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் என்கவுண்டருக்கு எதிரான கருத்துகளை முன்வைத்தது. ரஜினியின் ‘மாஸ்’ + ஞானவேலின் சமூக கருத்துகள் கலந்து கலவையாக இப்படம் உருவானது. நீட் பயிற்சி மையங்களில் நடைபெறும் மோசடி, அரசு பள்ளிகளின் நிலை உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை இப்படம் வெளிப்படையாக பேசியது. படம் மொத்தமாக ரூ.250 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டியதாக கூறப்படுகிறது. இந்த ஆண்டின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட படங்களும் இதுவும் ஒன்று.
05
மகாராஜா: நிதிலன் சுவாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஜூன் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ‘மகாராஜா’. அனுராக் கஷ்யப், மம்தா மோகன்தாஸ், நட்டி, அபிராமி, திவ்ய பாரதி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்துக்கு அஜ்னீஷ் லோக்நாத் இசையமைத்தார். நான் லீனியர் திரைக்கதையில் பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக பேசிய இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. க்ளைமாக்ஸ் காட்சியும், படத்தில் இடம்பெற்ற திருப்பமும், திரைக்கதை அமைப்பும் ரசிகர்களை கவர்ந்தது. குறிப்பாக விஜய் சேதுபதியின் அப்பாவித்தனமான நடிப்பு ரசிகர்களை ஈர்த்தது. மிக குறைந்த பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படும் இப்படம் உலக அளவில் ரூ.160 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டியதாக சொல்லப்படுகிறது. சீனாவில் வெளியாகி அங்கேயும் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.
06
ராயன்: தனுஷின் 50-வது படமான இதனை அவரே இயக்கி நடித்தார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த இந்தப் படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், செல்வராகவன், பிரகாஷ் ராஜ், அபர்ணா பாலமுரளி, துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்தனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடல்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தன. அதீத ஆக்ஷனுடன், பழிவாங்கும் கதையை அடிப்படையாக கொண்டு உருவான இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படும் இப்படம் உலக அளவில் ரூ.155 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் ‘அடங்காத அசுரன்’ பாடலில் இடம்பெற்ற ‘உசுரே நீ தானே’ பாடல் வரிகள் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி ஹிட் அடித்தன. மேலும் அந்த பாடல் காட்சி படமாக்கப்பட்ட விதமும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது குறிப்பிடத்தக்கது.
07
இந்தியன் 2: நீண்ட இடைவெளிக்குப் பின் ஷங்கர் இயக்கத்தில் வெளியானது ‘இந்தியன் 2’. ரசிகர்களிடையே ‘க்ளாசிக்’ என கொண்டாடப்பட்ட ‘இந்தியன்’ படத்தின் இரண்டாம் பாகமாக இந்தப் படம் வெளியானது. ‘விக்ரம்’ பட வெற்றிக்குப் பிறகு கமல் நடிக்கும் படம் என்பதால் எதிர்பார்ப்பு அதிகம் இருந்தது. ஆனால் அத்தனையும் சொதப்பியது. அயற்சியூட்டும் திரைக்கதையும், பலவீனமான காட்சிகளும் படத்தை ட்ரோல் மெட்டிரியலாக மாற்றியது. சித்தார்த், பிரியா பவானி சங்கர், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலர் நடித்த இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்தார். ரூ.250 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் உருவான இப்படம் கொடுத்த ஹைப் காரணமாக ரூ.130 கோடி வசூலை ஈட்டியதாக கூறப்படுகிறது. படம் நஷ்டத்தை தழுவிய போதிலும், இந்த ஆண்டின் பாக்ஸ் ஆஃபீஸ் வசூலை அடிப்படையாக கொண்டு பார்க்கும்போது 6வது இடத்தை பிடித்துள்ளது. லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்தது குறிப்பிடத்தக்கது.
08
கங்குவா: சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட படம் ‘கங்குவா’. ஞானவேல் ராஜா தனது ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் மூலம் இந்தப் படத்தை தயாரித்தார். பாபி தியோல், திஷா பதானி உள்ளிட்ட பலர் நடித்த இந்தப் படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். பிரமாண்ட காட்சிகள், கெட்டப்புகள், அதற்கு செலுத்தப்பட்ட உழைப்பு என மேக்கிங்கில் படம் கவனம் பெற்றது. ஆனால் பலவீனமான திரைக்கதையால் படம் ரசிகர்களிடையே எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. ரூ.300 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படும் இப்படம் உலக அளவில் ரூ.110 கோடியை வசூலித்தாக சொல்லப்படுகிறது.
09
அரண்மனை 4: ரூ.40 கோடி பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படும் படம் ரூ.100 கோடியை வசூலித்தது இந்த ஆண்டின் சர்ப்ரைஸ் வசூல். சுந்தர்.சியின் திகில் படங்களுக்கென்று எப்போதும் தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு என்பதை மீண்டும் நிரூபித்தது இந்தப் படம். சுந்தர்.சி இயக்கி நடித்த இந்தப் படத்தில் தமன்னா, ராஷி கண்ணா, சந்தோஷ் பிரதாப், கோவை சரளா, யோகி பாபு, விடிவி கணேஷ் உள்ளிட்ட பலர் நடித்தனர். ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைத்தார். கோடை விடுமுறையில் குழந்தைகளை குறிவைத்து வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே பெற்ற வரவேற்பால் ரூ.100 கோடி வசூலித்து அசத்தியதாம்.
10
அயலான் மற்றும் கேப்டன் மில்லர்: இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியான படம் ‘அயலான்’. ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள இந்தப் படத்தில், ரகுல் ப்ரீத் சிங், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்தனர். படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்தார். வேற்று கிரகவாசியின் வருகையை அடிப்படையாக கொண்டு நேர்த்தியான கிராஃபிக்ஸ் காட்சிகளால் படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இதன் மூலம் படம் உலக அளவில் ரூ.75 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டியதாக கூறப்படுகிறது. அதேபோல, தனுஷின் ‘கேப்டன் மில்லர்’ பொங்கல் பண்டிகைக்கு வெளியானது. பீரியட் ட்ராமா கதைக்களத்தில் உருவானது. அருண் மாதேஸ்வரன் இயக்கிய இந்தப் படம் அதீத ஆக்ஷன் காட்சிகள் விமர்சனத்தை எதிர்கொண்டது. சிவராஜ்குமார், சந்தீப் கிஷன், பிரியங்கா மோகன் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். இந்தப் படமும் உலக அளவில் ரூ.75 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது.
11
தங்கலான்: பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் ஆகஸ்ட் 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ‘தங்கலான்’. பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்தை ஞானவேல் ராஜா தயாரித்தார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்தார். மேஜிக்கல் ரியலிசம் திரைக்கதையில் புது வித திரையனுபவத்தை கொடுத்த இந்தப் படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்றது. ஆங்கிலேயரின் தங்கம் தேடும் முயற்சி, பண்ணையார் அடிமை முறை, நிலப்பறிப்பு, சுரண்டல் என பல விஷயங்களைப் பேசிய இந்தப் படம் உலக அளவில் ரூ.68 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது.
12
ரூ.50 கோடி பாக்ஸ் ஆஃபீஸ்: துரை செந்தில்குமார் இயக்கத்தில் சூரி நடிப்பில் மே 31-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ‘கருடன்’. இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. சசிகுமார், உன்னி முகுந்தன், ஷிவதா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா படத்துக்கு இசையமைத்துள்ளார். வெற்றிமாறனின் க்ராஸ் ரூட் பிலிம் கம்பெனி இந்தப் படத்தை தயாரித்தது. இடைவேளை காட்சி ரசிகர்களிடையே பாராட்டை பெற்றது. இந்தப் படம் மொத்தமாக ரூ.50 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டி குறைந்த பட்ஜெட்டில் அதிக வசூலை ஈட்டிய பட்டியலில் இடம் பெற்றுள்ளது.
13
பாக்ஸ் ஆஃபீஸில் இந்த ஆண்டில் எதிர்பார்க்காத ‘அமரன்’, ‘மகாராஜா’ போன்ற படங்கள் வெற்றி பெற்றாலும், ஓவர் புரமோஷன், ஹைப் மற்றும் கன்டென்ட் பலவீனத்தால் பல படங்கள் நஷ்டத்தை சந்தித்தன. இதனால் படத்தின் வெற்றிக்கு அதன் அடர்த்தியான உள்ளடக்கம், திரைமொழி முக்கிய பங்கு வகிப்பதை இந்த ஆண்டின் சிறு பட்ஜெட் படங்கள் வரவேற்பு உறுதி செய்துள்ளது. மேற்கண்ட சில படங்கள் வசூல் எண்ணிக்கையில் பாக்ஸ் ஆஃபீஸில் இடம்பிடித்தாலும், பட்ஜெட்டை அடிப்படையாக வைத்து பார்க்கும்போது, அவை தோல்வியை சந்தித்துள்ளன. மேலும், ரூ.450 கோடிதான் இந்த ஆண்டின் அதிகபட்ச வசூல் என்பது குறிப்பிடத்தக்கது.
- FIRST PUBLISHED : December 30, 2024, 5:41 PM IST
Year ender 2024 | விஜய்யின் ‘தி கோட்’ முதல் அசால்ட்டாக ஸ்கோர் செய்த ‘மகாராஜா’ வரை - டாப் 10 பாக்ஸ் ஆஃபீஸ் வசூல் படங்கள்!
தமிழ் சினிமாவில் இந்த ஆண்டு எதிர்பாராத படங்களின் வெற்றி ஆண்டாக அமைந்துள்ளது. எதிர்பார்த்த பல உச்ச நட்சத்திரங்களின் படங்கள் பாக்ஸ் ஆஃபீஸில் பின்னடைவை சந்தித்த நிலையில், சிறு பட்ஜெட் படங்கள் முத்திரை பதித்துள்ளன. உதாரணமாக ‘இந்தியன் 2’, ‘கங்குவா’ படங்கள் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தன. ஆனால் அந்தப் படங்கள் பாக்ஸ் ஆஃபீஸில் பெரிய அளவில் சோபிக்கவில்லை. ஆனால், ‘அமரன்’, ‘மகாராஜா’ போன்ற படங்கள் பாக்ஸ் ஆஃபீஸில் தனித்த முத்திரை பதித்துள்ளன. ரஜினியின் ‘வேட்டையன்’ அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஆனால், பெரிய அளவில் பாக்ஸ் ஆஃபீஸில் வசூல் குவிக்கவில்லை. அந்த வகையில் இந்த ஆண்டின் டாப் 10 பாக்ஸ் ஆஃபீஸ் வசூல் குவித்த படங்கள் குறித்து பார்ப்போம்.
MORE
GALLERIES