Last Updated:January 02, 2025 3:28 PM IST
17 பாரா தடகள வீரர் வீராங்கனைகள் உள்பட 32 பேருக்கு அர்ஜுனா விருதும், 5 பயிற்சியாளர்களுக்கு துரோணாச்சாரியார் விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டுக்கான தேசிய விளையாட்டு விருதுகளை மத்திய விளையட்டு மற்றும் இளைஞர் நல அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
இதில் ஒலிம்பிக் போட்டியில் 2 வெண்கல பதக்கம் வென்ற மனு பாக்கர், செஸ் சாம்பியன் குகேஷ் உள்பட 4 பேர் கேல் ரத்னா விருதை பெறுகின்றனர். இதேபோன்று அர்ஜுனா, துரோணாச்சாரியார் விருது உள்ளிட்டவை அறிவிக்கப்பட்டுள்ளன.
22 வயதாகும் மனு பாக்கர் பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியா சார்பாக துப்பாக்கி சுடுதல் போட்டியில் கலந்து கொண்டார். 10 மீட்டர் துப்பாக்கி சுடுதல் போட்டியில் தனிநபர் மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவில் சிறப்பான திறமையை வெளிப்படுத்திய மனு பாக்கர் வெண்கல பதக்கத்தை வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்தார்.
இதேபோன்று ஹாக்கியில் கேப்டன் ஹர்மன்ப்ரீத் சிங் தலைமையில் இந்திய அணி வெண்கல பதக்கத்தை தொடர்ந்து 2 ஆவது முறையாக வென்று பெருமை சேர்த்தது.
18 வயது நிரம்பிய தமிழ்நாட்டை சேர்ந்த குகேஷ் செஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்று உலகின் இளம் சாம்பியன் என்ற பெயரை பெற்றுள்ளார். அவருக்கு தமிழ்நாடு அரசு மற்றும் மத்திய அரசு சார்பாக விருதுகளும், பரிசுகளும் வழங்கப்பட்டுள்ளன.
பாராலிம்பிக்ஸ் போட்டியில் இந்தியாவின் பாரா தடகள வீரரான பிரவீன் உயரம் தாண்டுதல் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றார். இந்த வீரர் வீராங்கனை 4 பேருக்கும் கேல் ரத்னா விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது.
இவர்களுக்காக வரும் 17 ஆம் தேதி வெள்ளியன்று காலை 11 மணியளவில் குடியரசுத் தலைவர் மாளிகையில் விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில் குடியரசு தலைவர் திரவுபதி முர்முவிடம் இருந்து இந்த 4 பேரும் கேல் ரத்னா விருதைப் பெறவுள்ளனர்.
இதேபோன்று 17 பாரா தடகள வீரர் வீராங்கனைகள் உள்பட 32 பேருக்கு அர்ஜுனா விருதும், 5 பயிற்சியாளர்களுக்கு துரோணாச்சாரியார் விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.
First Published :
January 02, 2025 3:28 PM IST