2024-ஆம் ஆண்டில் இந்தியர்கள் அதிகம் பயணித்த சுற்றுலா இடங்கள்!

3 weeks ago 19

ஸ்கைஸ்கேனரின் டிராவல் டிரெண்ட்ஸ் ரிப்போர்ட் 2025 (Skyscanner's Travel Trends Report 2025) மற்றும் மேக்மைட்ரிப் (MakeMyTrip) மூலம் பெறப்பட்ட தகவலின்படி, 2024-ஆம் ஆண்டில் இந்தியர்கள் அதிகம் பயணம் செய்து கண்டுகளித்த முதல் 10 இடங்கள் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

1. ஷில்லாங், இந்தியா

"கிழக்கின் ஸ்காட்லாந்து" என்று அழைக்கப்படும் இந்தியாவின் மலைப்பிரதேசமான ஷில்லாங், இந்தியப் பயணிகளுக்கான பிரபலமான இடங்களின் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. பசுமையான மலைகள், அருவிகள் என இயற்கை சூழலுடன், சாகச பயணங்களை விரும்பும் பயணிகளுக்கு ஏற்ற இடமாக ஷில்லாங் இருந்து வருகிறது. ஸ்கைஸ்கேனர் வழங்கிய தகவல்படி, ஷில்லாங் பயணத்திற்கான மக்களின் தேடல்கள் 828% உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2. அல்மாட்டி, கஜகஸ்தான்

உலகின் மதிப்புமிக்க சிறந்த இடங்களில் ஒன்றான அல்மாட்டி, அதன் அற்புதமான இயற்கை அழகு மற்றும் மலிவு விலை பயணத்திற்காக கொண்டாடப்படுகிறது. அல்மாட்டி செல்வதற்கான விமான பயண டிக்கெட்டுகளின் விலை 44% குறைந்துள்ளதால், மத்திய ஆசியாவின் அழகிய நிலப்பரப்பு, செழுமையான கலாச்சாரத்தை பட்ஜெட் விலையில் அனுபவிக்க ஏற்ற இடமாக இருந்து வருகிறது. மேக்மைட்ரிப்பின் 2024 டிரெண்ட் ரிப்போர்ட்டின் படி, பாகு (அஜர்பைஜான்), அல்மாட்டி (கஜகஸ்தான்), மற்றும் நகோயா (ஜப்பான்) போன்ற அதிகம் பரிட்சயப்படாத பகுதிகள் தற்போது மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.

3. லங்காவி, மலேசியா

வெப்பமண்டல பகுதியான லங்காவி, அதன் கண்ணாடி போன்ற நீலநிறக்கடல் மற்றும் ஆடம்பரமான ஓய்வு விடுதிகளுக்கு பிரபலமானது. சூரிய ஒளியில், கடலில் உலாவ விரும்பும் பயணிகளுக்கு ஏற்ற இடமாக இருப்பதால் இந்தியர்களின் கவனத்தை இது ஈர்த்துள்ளது. லங்காவியின் அழகிய கடற்கரைகள் மற்றும் அங்குள்ள சிலிர்ப்பூட்டும் அனுபவங்கள் குடும்பங்கள் மட்டுமின்றி, தேனிலவு செல்வோரையும் வெகுவாக கவர்ந்துள்ளது. இதன் காரணமாக லங்காவிக்கு செல்வதற்கான மக்களின் தேடல்கள் 433% அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

4. பாகு, அஜர்பைஜான்

ஐரோப்பா மற்றும் ஆசியாவுக்கான குறுக்கு வழியாக அறியப்படும் பாகு, ஒரு வளர்ந்து வரும் முக்கிய சுற்றுலாத் தளமாகும். யுனெஸ்கோ பட்டியலிட்ட இந்த பழைய நகரம், இந்திய பயணிகளுக்கு மிகவும் பிடித்த தளமாக பார்க்கப்படுகிறது. இந்த இடத்திற்கான மக்களின் விருப்பம் 395% அதிகரித்துள்ள நிலையில், இது கலாச்சாரம், மலிவு விலை மற்றும் தனித்துவமான அனுபவங்களை வழங்கும் இடமாக பார்க்கப்படுகிறது.

5. டோக்கியோ, ஜப்பான்

கலாச்சாரத்தின் மீது அதீத ஈடுபாடு கொண்டவர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய ஒரு நகரம் டோக்கியோ. பாரம்பரியம் மற்றும் நவீனத்துவத்தின் கலவைக்கு பெயர் பெற்ற டோக்கியோவில் தான், மனதை மயக்கும் டிஜிட்டல் கலை அனுபவத்தை தரும் டீம்லேப் பார்டர்லெஸ் மியூசியம் இடம்பெற்றுள்ளது. டோக்கியோ மக்களின் தேடல்களில் 87% அதிகரிப்பை கண்டுள்ளது. இது ஜப்பானின் வளர்ந்து வரும் ஆர்வத்தைக் குறிக்கிறது.

6. ட்ரோம்சோ, நார்வே

இந்தியப் பயணிகள் அதிகளவில் விரும்பும் பகுதிகளில் ஒன்றாக நார்வேயின் ட்ரோம்சோ விளங்குகிறது. ஆர்க்டிக்கின் நுழைவாயில் என்று அழைக்கப்படும் இந்த பகுதி நட்சத்திரங்களைப் பார்ப்பதற்கும், இரவு நேரத்தில் புகைப்படம் எடுப்பதற்கும் ஏற்றதாக இருந்து வருகிறது. மக்கள் தேடலில் இந்த பகுதி 251% அதிகரிப்பைக் கண்டுள்ளது.

7. ஜகார்த்தா, இந்தோனேஷியா

பட்ஜெட்டில் பயணம் செய்ய விரும்பும் பயணிகளுக்கு ஏற்ற ஒரு சுற்றுலாத் தளமாக ஜகார்த்தா இருந்து வருகிறது. இந்த பகுதிக்கு செல்வதற்கான விமான டிக்கெட்டின் விலையும் 27% குறைந்துள்ளதால், குறைவான விலையில் இந்தோனேசியாவின் அழகியலை கண்டுகளிப்பதற்கான மக்களின் ஒரு முக்கிய தேர்வாக இருந்து வருகிறது. இது பரபரப்பான சந்தைகள் மற்றும் வரலாற்றுச் சின்னங்களுக்குப் பெயர் பெற்றது.

8. தாஷ்கண்ட், உஸ்பெகிஸ்தான்

கலாச்சார ஆர்வலர்களுக்கு விருப்பமான தேர்வாக உஸ்பெகிஸ்தான் இருந்து வருகிறது, இதில் குறிப்பாக தாஷ்கண்ட் முன்னிலை வகிக்கிறது. அங்கு இடம் பெற்றிருக்கும் பிரமிக்க வைக்கும் இஸ்லாமிய கட்டடக்கலை, செழுமையான வரலாறு மற்றும் தனித்துவமான உணவு வகைகளால் இந்த பகுதி 158% கூடுதலாக மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

9. கொழும்பு, இலங்கை

ஒரு குறுகிய விமான பயணத்தைக் கொண்ட இலங்கையின் தலைநகரான கொழும்பு, இந்தியர்களுக்கு விருப்பமான தேர்வாக அமைகிறது. அமைதியான கடற்கரைகள், செழுமையான பாரம்பரிய தளங்கள் மற்றும் சுவையான உணவு வகைகளை கொண்ட இந்த நகரத்திற்கான, தேடல் 120% வளர்ச்சியை பெற்றுள்ளது.

10. சியோல், தென் கொரியா

உலகளவில் பிரபலமாக அறியப்படும் கே-டிராமா மற்றும் கே-பாப் ஆகியவற்றின் பிறப்பிடமான தென் கொரியா, இளைஞர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது. சியோலின் டைனமிக் கலாச்சாரம், அதிநவீன தொழில்நுட்பம் ஆகியவை இதனை கட்டாயம் பார்க்க வேண்டிய இடங்களில் ஒன்றாக மாற்றியுள்ளது. சியோலுக்கான விமானக் கட்டணங்கள் 14% குறைந்துள்ளதால், இது மக்களின் விருப்பமான இடங்களில் ஒன்றாக மாறியுள்ளது.

First Published :

January 01, 2025 9:32 AM IST

Read Entire Article