Updated: Wednesday, January 8, 2025, 16:08 [IST]
தற்போது உணவு விநியோக தளங்களிடையே கடும் போட்டி நிலவி வருகிறது. எனவே தங்களுடைய செயல்பாடுகளில் என்னென்ன மாற்றங்களை கொண்டு வரலாம் என அந்தந்த நிறுவனங்கள் யோசிக்க தொடங்கிவிட்டன. அந்த வகையில் உணவு மற்றும் மளிகை பொருட்கள் விநியோகத் தளமான ஸ்விக்கி "ஸ்னாக் (SNACC)" என்ற புதிய அப்ளிகேஷனை வெளியிட்டுள்ளது. இதில் வெறும் 15 நிமிடங்களில் ஸ்நாக்ஸ் வகைகள், பானங்கள் போன்றவற்றை வாங்கலாம்.
இதுவரையில் ஸ்விக்கி நிறுவனம் உணவு விநியோகம், விரைவு வர்த்தகம், ஹைபர் லோக்கல் டெலிவரி, டைனிங் அவுட் போன்ற அனைத்திற்கும் ஒரே ஒரு ஆப்-பை பயன்படுத்தியது. பிளிங்கிட் நிறுவனத்தின் பிஸ்ட்ரோ அப்ளிகேஷன் முதல் செப்ட்டோ நிறுவனத்தின் கஃபே மற்றும் ஸ்விஷ் அப்ளிகேஷன் வரை முன்னணி ஆன்லைன் டெலிவரி தளங்கள் அனைத்தும் தங்களுடைய அப்ளிகேஷன்களை இரட்டிப்பாக்கி வருகின்றன.
ஏனெனில் அதிக எண்ணிக்கையிலான பயனர்கள் விரைவாக உணவுகளை ஆர்டர் செய்வதில் ஆர்வமாக உள்ளனர். சோமேட்டோவிற்கு சொந்தமான பிளிங்கிட் மற்றும் செப்டோ போன்ற விரைவு வர்த்தக தளங்கள் உணவு வினியோகம் மற்றும் பிற அப்ளிகேஷன்களுக்கு தனித்தனியான ஆப்களை அறிமுகப்படுத்தி அவற்றில் சலுகைகளையும் வேறுபடுத்தி வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகின்றன.
தற்போது அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் இந்த ஸ்னாக் அப்ளிகேஷன் பிரகாசமான பச்சை நிற பேக்ரவுண்டைக் கொண்டுள்ளது. அதில் டார்க் நிறத்தில் டெக்ஸ்ட் கொடுக்கப்பட்டுள்ளது. ஜனவரி 7-ஆம் தேதி முதல் இந்த அப்ளிகேஷன் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. அதுவும் பெங்களூரின் சில பகுதிகளில் மட்டுமே இந்த வசதி தற்போது கிடைக்கிறது. மற்ற பகுதிகளுக்கும் ஸ்விக்கி நிறுவனம் இந்த அப்ளிகேஷனை விரிவுபடுத்தும் என்றும் தகவல் தெரிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த ஸ்நாக் அப்ளிகேஷனில் இந்திய காலை உணவு, காபி, பேக்கரி ஐட்டங்கள், குளிர்பானங்கள், முட்டை மற்றும் புரதம் கொண்ட உணவுகள் காண்பிக்கப்படுகிறது. சில காலத்திற்கு முன்பு ஸ்விக்கி நிறுவனம், போல்ட் என்ற அப்ளிகேஷனை அறிமுகம் செய்தது. போல்டு என்பது ஸ்விக்கியின் விரைவான உணவு விநியோக பிரிவாகும். இதில் பட்டியலிடப்பட்ட உணவகங்கள் ஆர்டர்களை குறிப்பிட்ட நேரத்திற்குள் தர வேண்டும். இது போன்ற உணவகங்கள் மட்டுமே போல்ட் அப்ளிகேஷனில் பட்டியலிடப்பட்டிருக்கும்.
ஸ்விக்கி நிறுவனத்தின் 15 நிமிட உணவு விநியோக செயலியான ஸ்னாக்-இன் அறிமுகம், விரைவான உணவு விநியோகத் துறையில் புதிய போட்டியை உருவாக்கியுள்ளது. நுகர்வோரின் மாறிவரும் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், உணவு விநியோகத் துறையில் நிறுவனங்கள் புதிய சேவைகளை அறிமுகப்படுத்தி வருகின்றன. ஸ்னாக் போன்ற செயலிகள், நுகர்வோரின் வாழ்க்கை முறையை எளிதாக்கி, விரைவான மற்றும் வசதியான உணவு விநியோகத்தை சாத்தியமாக்குகின்றன.
தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary
Swiggy Unveils SNACC App for 15-Minute Food Delivery
Swiggy launches its new app, SNACC, promising food delivery in just 15 minutes. Stay ahead in the fast-paced food delivery competition. learn more here!