வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாக இருக்கும் ’வாடிவாசல்’ திரைப்படத்தில் தனக்கு ஒரு முக்கிய கரெக்டர் இருப்பதாக இயக்குனர் தமிழ் சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான ’விடுதலை 2’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்ற நிலையில், இந்த படம் வசூல் ரீதியாகவும் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், வெற்றிமாறன் சமீபத்தில் அளித்த பேட்டியில், ’விடுதலை’ படத்தின் மூன்றாம் பாகம் கிடையாது என்றும், இந்த படத்தின் ஒரு மணி நேர காட்சிகள் இன்னும் இருந்தாலும், அதை ஓடிடியில் தான் வெளியிட இருப்பதாகவும் கூறியிருந்தார்.
எனவே, வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாக இருக்கும் அடுத்த படம் ’வாடிவாசல்’ என்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சூர்யா மற்றும் அமீர் முக்கிய வேடங்களில் நடிக்கும் இந்த படம் தமிழ் சினிமாவின் முக்கியத்துவம் உள்ள படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில், வில்லன் நடிகர், இயக்குனர் தமிழ் என்பவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், வெற்றிமாறன் தன்னை ’வாடிவாசல்’ திரைப்படத்திற்காக தயாராக இருக்குமாறு கூறியதாகவும், அதே நேரத்தில், கார்த்தியை வைத்து தான் ஒரு படத்தை இயக்க இருப்பதாகவும், அந்த படத்திற்கும், ’வாடிவாசல்’ படத்திற்கும் தேதிகள் பிரச்சனை வராது என்று நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, ’வாடிவாசல்’ படத்தில் இயக்குனர் தமிழ் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க உள்ளார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதோடு, அவர் கார்த்தியை வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளார் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.