Published: Tuesday, January 7, 2025, 12:59 [IST]
பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெங்களூருவில் மெட்ரோ ரயில் கட்டணங்கள் 40 முதல் 45 சதவீதம் வரை உயர்த்தப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பெங்களூரு சாலை போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் இருக்க நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் மெட்ரோ சேவைகளை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் மெட்ரோ ரயில் கட்டணங்களை உயர்த்த இருப்பதாக தகவல் வெளியாகி இருப்பது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
![பெங்களூர்வாசிகளுக்கு சோதனை.. பேருந்தை தொடர்ந்து மெட்ரோ கட்டணமும் உயர்த்தப்படுவதாக தகவல்..! பெங்களூர்வாசிகளுக்கு சோதனை.. பேருந்தை தொடர்ந்து மெட்ரோ கட்டணமும் உயர்த்தப்படுவதாக தகவல்..!](https://images.goodreturns.in/ta/img/2025/01/newproject-2025-01-07t125846-535-1736234935.jpg)
மெட்ரோ ரயில் நிர்வாகம் டிக்கெட் கட்டணங்களை மறு சீரமைப்பு செய்வது தொடர்பாக ஒரு குழுவை அண்மையில் அமைத்தது. இந்த குழுவில் உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தாரணி, கர்நாடக உள்துறை, நகர விவகாரங்கள் துறை அதிகாரி சத்யேந்திரபால் சிங், ஓய்வு பெற்ற கூடுதல் தலைமை செயலர் ரமண ரெட்டி ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
இந்த குழுவினர் பல்வேறு நகரங்களிலும் எவ்வளவு கட்டணம் விதிக்கப்படுகிறது, அது எந்த இடைவெளிகளில் உயர்த்தப்படுகிறது என ஆய்வு செய்தனர். இதனை அடுத்து அவர்கள் மெட்ரோ ரயில் டிக்கெட் கட்டணங்களை 40 முதல் 45 சதவீதம் வரை உயர்த்த பரிந்துரை செய்துள்ளனர். தற்போது பெங்களூரில் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து, மற்றொரு நிலையத்துக்கு குறைந்தபட்சம் 10 ரூபாயும், அதிகபட்சம் 60 ரூபாயும் என கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இந்நிலையில் இந்த குழுவின் பரிந்துரையை ஏற்று ரயில் கட்டணம் உயர்த்தப்பட்டால் குறைந்தபட்ச கட்டணம் 15 ரூபாய் என்றும் அதிகபட்ச கட்டணம் 85 ரூபாய் வரையும் உயரும் என சொல்லப்படுகிறது.
மெட்ரோ ரயில் திட்ட விரிவாக்கத்திற்காக வாங்கப்பட்ட கடன்கள், ரயில் மேலாண்மை, ஊழியர்கள் சம்பளம் என ஆண்டுதோறும் செலவுகள் அதிகரிப்பதை சுட்டிக்காட்டி கட்டண உயர்வு செய்யலாம் என பரிந்துரைக்கப்பட்டுள்ளதாம்.வரும் 17ஆம் தேதி இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என அதிகாரிகள் கூறுகின்றனர்.
கடந்த 2017ஆம் ஆண்டு மெட்ரோ ரயில் கட்டணம் 10 முதல் 15 சதவீதம் வரை உயர்த்தப்பட்டது. அதன் பிறகு 8 ஆண்டுகள் கழித்து தான் கட்டணம் உயர்த்தப்படுகிறது என்கின்றனர் அதிகாரிகள். அண்மையில் தான் கர்நாடகவில் 15 விழுக்காடு வரை பேருந்து கட்டணங்கள் உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டது. இந்த நிலையில் மெட்ரோ ரயில் கட்டணங்களும் உயர்த்தப்படும் என்று இந்த அறிவிப்பு பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாஜக எம் பி மோகன் மெட்ரோ ரயில் கட்டணங்களை உயர்த்த கூடாது என கேட்டுக் கொண்டுள்ளார். இது தொடர்பாக மெட்ரோ ரயில்வே நிர்வாக அதிகாரிகளை சந்தித்த அவர் ரயில் கட்டண உயர்வு தொடர்பான முடிவை மறு பரிசீலனை செய்யும்படி கேட்டுக் கொண்டிருப்பதாக கூறியுள்ளார். மெட்ரோ ரயில் கட்டணங்கள் உயர்த்தப்பட்டால் அன்றாடம் இதனை பயன்படுத்தக்கூடிய மக்களின் எண்ணிக்கை குறையும் என அவர் கூறியிருப்பதாக தெரிகிறது.
Story Written By: Devika
தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary
Bengaluru Metro fare expected to rise by 40-45%, increase after eight years
After bus fare hike , Bengaluru has to face Metro ticket prices hike , which is expected to rise by 40-45%, marking the first increase in almost eight years.