Last Updated:January 02, 2025 6:38 PM IST
Pongal Pot Making| பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் தற்போது மண் பானைகள் தயாரிக்கும் பணியில் மண்பாண்டத் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
விழுப்புரத்தில் பொங்கல் பானை செய்யும் பணி மும்முரம்...
விழுப்புரம் மாவட்டம் சாலைஅகரம் பகுதியில் பொங்கல் பண்டிகைக்குத் தேவையான மண்பானைகள் செய்யும் பணியில் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றார்கள். மேலும், தமிழக அரசு வழங்கும் பொங்கல் தொகுப்புடன் மண்பானையும் சேர்த்துத் தர வேண்டும் என மண்பாண்டத் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மண் பானைகள் தயாரிப்பு: தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை தை 1-ஆம் தேதி வெகுவிமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி புதுப்பானையில் பொங்கலிடுவதை இன்றளவும் தமிழர்கள் மரபாகக் கொண்டுள்ளனர். இதற்காக விழுப்புரம் அருகே சாலைஅகரம், ராகவன்பேட்டை, அய்யூர்அகரம், அய்யங்கோவில்பட்டு உள்ளிட்ட இடங்களில் மண் பானைகள் தயாரிக்கும் பணியில் பல ஆண்டுகளாக மண்பாண்டத் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இங்கு தயார் செய்யப்படும் மண் பானைகள் விழுப்புரம் மாவட்டம் மட்டுமின்றி சென்னை, கோவை, சேலம், திருச்சி, ஈரோடு உள்ளிட்ட பல வெளிமாவட்டங்களுக்கும், புதுச்சேரி மாநிலத்திற்கும் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது. கடந்த ஆண்டு பெய்த மழையினால் மண் பானைகள் தயாரிப்பு பணி பெரிதும் பாதிக்கப்பட்டது. அதேபோல் இந்த ஆண்டும் பெஞ்ஜல் புயலால் பெய்த தொடர் கனமழையினால் மண் பானைகள் தயாரிக்கும் பணியில் சற்று பாதிப்பு ஏற்பட்டது.
இந்த சூழலில் பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 3 வாரங்களே உள்ள நிலையில் தற்போது மண் பானைகள் தயாரிக்கும் பணியில் மண்பாண்டத் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். சிறிய அளவிலான பானைகள் முதல் பெரிய அளவிலான பானைகளைத் தயாரித்து வருகின்றனர். இவ்வாறு தயார் செய்யப்பட்ட பானைகளை நன்கு உலர வைத்து, பின்னர் சூளைபோட்டு வேக வைக்கின்றனர். இதுபற்றி சாலைஅகரத்தை சேர்ந்த மண்பாண்டத் தொழிலாளர்கள் கூறுகையில், “நாங்கள் தமிழர்களின் பாரம்பரியத்தைக் கடைப்பிடிக்கும் விதமாக இந்த தொழிலைச் செய்து வருகிறோம். வருடத்தில் கார்த்திகை தீபத்திருநாள் மற்றும் பொங்கல் பண்டிகையை வைத்துத்தான் எங்களின் வாழ்வாதாரமே உள்ளது. சுவையும், ஆரோக்கியமும் தந்த மண்பானை சமையல் தற்போது கிராமங்களில் கூட அரிதாகி வருகிறது.
அதுபோல் மண்பாண்டப் பொருட்களின் பயன்பாடும் கிராம மக்களிடம் குறைந்து வருகிறது. இதனால் இந்த தொழில் நலிவடைந்து அதனை நம்பியிருந்த பலர் வேறு தொழிலுக்கு மாறிவிட்டனர். ஆனால் ஒரு சில கிராம மக்கள் பழமை மாறாமல் மண்பாண்டங்களைப் பயன்படுத்தி வருவதால் அவர்களின் தேவைக்காக ஆண்டுதோறும் மண் பானைகள் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறோம். வீடுகளில் உள்ளவர்கள் எவர் சில்வர் பாத்திரங்கள், பித்தளைப் பாத்திரங்கள், பெரும்பாலானோர் சமையல் கியாஸ் அடுப்புகளில் பாத்திரங்களை வைத்துப் பொங்கல் வைத்து விடுகின்றனர். இதனால் மண்பானையில் மவுசு குறைந்து கொண்டே வருகிறது.
மேலும், ரேஷன் கடைகள் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆண்டுதோறும் அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்புடன், ரொக்கப்பணமும், கரும்பையும் அரசு வழங்கி வருகிறது. அதுபோல் பொங்கலிடுவதற்கு முக்கியத் தேவையாக உள்ள மண் பானைகளையும் சேர்த்து வழங்கினால் எங்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும். கடந்த சில ஆண்டுகளாக நாங்கள் இந்த கோரிக்கையைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இருப்பினும் அரசு செவிசாய்க்கவில்லை. இந்த ஆண்டாவது அதனை அரசு அறிவிக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறோம்.
தமிழர்களின் பாரம்பரியத்தைப் பறைசாற்றும் விதமாகவும், நலிவடைந்து வரும் மண்பாண்டத் தொழிலாளர்களின் வாழ்வில் ஒளியேற்றிடும் வகையிலும் அரசு சார்பில் மண் பானைகளைக் கொள்முதல் செய்து பொங்கல் பரிசு தொகுப்புடன் சேர்த்து மண் பானையையும் வழங்க ஏற்பாடு செய்தால் எங்களுடைய வாழ்வாதாரத்திற்கு வழிபிறக்கும்” என மண்பாண்டத் தொழிலாளர்கள் தெரிவித்தனர்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
First Published :
January 02, 2025 12:42 PM IST