Published: Tuesday, January 7, 2025, 8:28 [IST]
உலக அளவில் பொருளாதார நிச்சயமற்றத்தன்மை ஏற்படும் போது தங்கம் ஒரு சிறந்த பாதுகாப்பாக இருக்கும். அதனால் தான் மத்திய வங்கிகள் தொடர்ந்து தங்களுடைய தங்க இருப்பை அதிகரித்து வருகின்றன. அந்த வகையில் உலக அளவில் பார்க்கும்போது, 2024-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மட்டும் மத்திய வங்கிகள் 53 டன் தங்கத்தை தங்க இருப்பில் சேர்த்துள்ளன. அதில் இந்தியாவின் மத்திய வங்கியான ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா கூடுதலாக 8 டன்கள் தங்கத்தை சேர்த்துள்ளதாக வேர்ல்ட் கோல்ட் கவுன்சில் (WGC) கடந்த திங்களன்று தெரிவித்தது.
வளர்ந்து வரும் நாடுகள் உலகளாவிய நிச்சயமற்ற தன்மைக்கும் மத்தியில் தங்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் தங்கத்தை தீவிரமாக வாங்கி வருகின்றன. 2024-ஆம் ஆண்டின் இறுதியில் உலகெங்கிலும் உள்ள மத்திய வங்கிகள் தங்கத்தை வாங்கியதில் அதிக பங்களித்துள்ளன. இதில் நவம்பர் மாதம் தங்கம் வாங்கும் மாதமாகவே அமைந்தது. மத்திய வங்கிகள் கூட்டாக 53 டன்களை வாங்கி தங்கள் கையிருப்பில் சேர்த்ததாக வேர்ல்ட் கோல்ட் கவுன்சில் தெரிவித்துள்ளது.
அமெரிக்க தேர்தலைத் தொடர்ந்து நவம்பர் மாதம் தங்கத்தின் விலை வெகுவாக குறைந்தது. இதனால் சில மத்திய வங்கிகள் தங்கத்தை கூடுதலாக கையிருப்பில் சேர்த்திருக்கலாம் என்றும் WGC தெரிவித்திருக்கிறது. 2024-ஆம் ஆண்டிலும் ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா தங்கம் வாங்கி வருவதை தொடர்ந்தது. நவம்பர் மாதத்தில் 8 டன் தங்கத்தை தனது இருப்பில் சேர்த்துள்ளது.
இதனால் வருடாந்திர வாங்குதல் 73 டன்களாகவும், ஏற்கனவே ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியாவில் இருக்கும் தங்க கையிருப்பு 876 டன்களாகவும் உயர்ந்துள்ளது. 2024-ஆம் ஆண்டில், போலந்திற்கு அடுத்தபடியாக தங்கம் வாங்கியதில் 2-வது இடத்தில் இந்தியா உள்ளது.
WGC வழங்கிய தகவல்களின்படி நேஷனல் பேங்க் ஆப் போலந்து நவம்பர் மாதம் தனது தங்க இருப்புகளை 21 டன்கள் அதிகரித்தது. இதனால் மொத்த ஆண்டு கொள்முதல் 90 டன்களாகவும், மொத்த தங்க கையிருப்பு 448 டன்களாகவும் அதிகரித்திருக்கிறது. உஸ்பெகிஸ்தான் மத்திய வங்கியின் தங்க இருப்பு ஜூலை மாதத்திற்குப் பிறகு முதல் மாதாந்திர கூடுதலாக 9 டன் அதிகரித்தது. வங்கியின் வருடாந்திர நிகர கொள்முதல் 11 டன்னாகவும் மொத்த தங்க இருப்பு 382 டன்னாகவும் உள்ளது என்று அறிக்கை தெரிவிக்கிறது.
நேஷனல் பேங்க் ஆப் கஜகஸ்தான் தங்க கையிருப்பை 5 டன்கள் அதிகரித்தது. தொடர்ந்து 2-வது மாதமாக இந்த நவம்பரிலும் தங்கம் வாங்கி தனது மொத்த கையிருப்பை 295 டன்களாக உயர்த்தியுள்ளது. சீனாவின் மத்திய வங்கியான பீப்பிள்ஸ் பேங்க் ஆஃப் சீனா 6 மாத இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தங்கம் வாங்குவதைத் தொடங்கியுள்ளது. இதனால் 5 டன் தங்கம் அதிகரித்துள்ளது. தற்போது மொத்த தங்க கையிருப்பாக 2264 டன்களை வைத்துள்ளதாக அறிக்கை தெரிவிக்கிறது.
தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary
RBI Increases Gold Reserves by 8 Tons in November 2024 says WGC Report
The Reserve Bank of India added 8 tons of gold to its reserves in November 2024, as per the World Gold Council (WGC) report. Learn more about RBI's gold holdings.