Last Updated:December 26, 2024 5:52 PM IST
வலிக்கிறதே என்பதற்காக நீங்கள் ஒரே இடத்தில் அமர்ந்திருந்தால் வலியை இன்னும் மோசமாக்கும். மூட்டுகளில் எலும்புகள் இறுக்கமாகிவிடும். அதை சுற்றியுள்ள தசைகள் பலவீனமாகி அழுத்தத்தை தரும்.
குளிர்காலம் வந்தாலே மூட்டு வலியும் சேர்ந்தே வந்துவிடும். குறிப்பாக கீல்வாதம் மற்றும் பழைய எலும்பு முறிவு பிரச்சனை உள்ளவர்களுக்கு பாதிப்பை இன்னும் மோசமாக்கும். இப்படி குளிர்காலம் வந்தாலே எலும்பு பிரச்சனைகள் வர என்ன காரணம் தெரியுமா..? விரிவாக பார்க்கலாம்.
குளிர்காலத்தில் மூட்டுகள் வலிக்க என்ன காரணம்..?
குளிர்ச்சியான பருவநிலையே மூட்டுவலி அதிகரிக்க முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. அதாவது குளிர்ச்சியான சூழல் இரத்தக் குழாய்களை இறுக்கமாக்குகிறது. மூட்டுகளில் போதிய இரத்த ஓட்டம் கிடைப்பதில்லை. இதனால் இறுக்கமாகவும், வலியாகவும் உணர்கிறீர்கள். அதுமட்டுமன்றி குளிர் நிலையால் தசைகளில் அழுத்தம் ஏற்படுகிறது. தசை அழுத்தத்தால் எலும்புகள் கூடுதல் அழுத்தத்தை அனுபவிக்கின்றன. குறிப்பாக முட்டி , இடுப்பு மற்றும் முதுகு பகுதிகளில் அதிக வலியை உணரக்கூடும்.
குளிர்காலத்தில் காற்றில் உண்டாகும் அழுத்தம் காரணமாகவும் அசௌகரியத்தை அனுபவிக்கக் கூடும். இதனால் மூட்டுகளில் வீக்கம், அதிக வலி இருக்கும். குறிப்பாக கீல்வாத வலியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அழற்சி பண்புகள் அதிகரிக்க கூடும். இதனால் வலி அதிகமாக இடுக்கும். எலும்புப்புரை, எலும்பு மஜ்ஜை பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்களும் வலியை அதிகமாக உணர்வார்கள்.
நடக்கவில்லை எனில் இன்னும் ஆபத்து :
வலிக்கிறதே என்பதற்காக நீங்கள் ஒரே இடத்தில் அமர்ந்திருந்தால் வலியை இன்னும் மோசமாக்கும். மூட்டுகளில் எலும்புகள் இறுக்கமாகிவிடும். அதை சுற்றியுள்ள தசைகள் பலவீனமாகி அழுத்தத்தை தரும். பின் அது பிரச்சனையை சமாளிக்க முடியாதபடி மோசமாக்கிவிடும். அதுமட்டுமன்றி இந்த சமயத்தில் உங்கள் உடல் எடை கூடினாலும் வலியை இன்னும் அதிகமாக்கிவிடும்.
மற்றொரு காரணம், குளிர்காலத்தில் அதிகமாக தாகம் எடுக்காது. அப்படி உடலுக்கு போதுமான தண்ணீர் கிடைக்காதபோது மூட்டுகளுக்கு நீர்ச்சத்து கிடைக்காமல் போகும். இதனால் மூட்டுகள் இறுக்கமாகி வலியை அதிகரிக்கும்.
குளிர்காலத்தில் மூட்டுவலியை சமாளிப்பது எப்படி ..?
உடலுக்கு அசைவு கொடுங்கள் : நடைப்பயிற்சி, மிதமான உடற்பயிற்சி, யோகா, வீட்டிற்குள்ளேயே நடப்பது போன்றவை செய்தால் பிரச்சனை குறையலாம். அதேபோல் தசைகளுக்கும் நெகிழ்வுத்தன்மை கிடைக்கும்.
கதகதப்பான உடல் : கதகதபாக வைத்துக்கொள்ளும் ஆடைகளை அணியுங்கள். கைகளுக்கு கிளவுஸ், கால்களுக்கு சாக்ஸ் அணியுங்கள். இதனால் மூட்டுகள் குளிர்ச்சியை உணராமல் இருக்கும். வலி சற்று குறையும்.
ஆரோக்கியமான உணவு : ஆரோக்கியமான உணவு முறையுடன் பழங்கள், காய்கறிகள், நட்ஸ் வகைகள் ஆகியவற்றையும் சேர்த்துக்கொள்வது அவசியம். அழற்சியை குறைக்கும், எலும்புகளுக்கு வலு சேர்க்கும் உணவுகளை சேர்த்துக்கொள்ளுங்கள். உதாரணத்திற்கு இஞ்சி, மஞ்சள், பெர்ரீஸ் ஆகியவற்றை சேர்த்துக்கொள்ளலாம். இதனால் உடல் இயக்கமும் சீராக இருக்கும்.
நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக்கொள்ளுங்கள் : குளிர்காலத்தில் தாகம் அவ்வளவாக எடுக்காது என்றாலும் அவ்வப்போது தண்ணீர் அருந்துங்கள். அருந்தும் நீர் சற்று வெதுவெதுப்பாக இருப்பது நல்லது.
ஹீட் தெரபி செய்து பாருங்கள் : ஹீட்டிங் பேடுகள் பயன்படுத்தி மூட்டுகளின் வலியை குறைக்கலாம். இதனால் மூட்டுகளின் இறுக்கம் குறையும்.
மருத்துவரை அணுகுங்கள் : மூட்டு வலி சமாளிக்கமுடியாதபடி அதிகமாக இருந்தால் உங்கள் எலும்பியல் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது அவசியம்.
First Published :
December 26, 2024 5:52 PM IST