அதிகபடியான நீரிழப்பு என்பது சிறுநீரக ஆரோக்கியத்தை கணிசமாக பாதிக்கும் ஒரு பொதுவான பிரச்சனை. சிறுநீரகங்கள் சரியாக செயல்படுவதற்கும், இரத்தத்தில் இருந்து கழிவுகளை வடிகட்டுவதற்கும் போதுமான நீர் தேவை. உடலில் நீர்ச்சத்து குறையும்போது, அது சிறுநீரக கற்கள், சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகள் மற்றும் நாள்பட்ட சிறுநீரக நோய் உட்பட பல்வேறு சிக்கல்களை உருவாக்கலாம்.
பொதுவாக, வெயில் காலத்தில்தான் பெரும்பாலான மக்கள் சிறுநீரக பிரச்சனையால் அவதிப்படுவார்கள். ஆனால், குளிர்காலத்திலும் சிறுநீரக கற்கள் மற்றும் சிறுநீரகம் தொடர்பான பிற பிரச்சனைகள் அதிகரித்து வருகின்றன. இவ்வாறான பிரச்சனைகள் அதிகரிப்பதற்கான காரணங்கள் என்ன என்பது குறித்து டெல்லியில் உள்ள எம்ஏஎஸ்எஸ்எச் (MASSH) சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் யூரோலஜி, ஆண்ட்ராலஜி & யூரோ-ஆன்காலஜி துறைத் தலைவரும், மருத்துவருமான அங்கித் கோயல் விளக்குகிறார்.
நீரிழப்புக்கான அறிகுறிகள்
சிறுநீரகத்தை பாதிக்கும் நீரிழப்புக்கான முதல் அறிகுறிகளில் ஒன்று சிறுநீர் வெளியீடு மற்றும் சிறுநீரின் நிறத்தில் ஏற்படும் மாற்றமாகும். பொதுவாக சிறுநீர் வெளிர் மஞ்சள் நிறமாகவும், தெளிவாகவும் இருக்க வேண்டும். இருப்பினும், நீங்கள் நீரிழப்புடன் இருக்கும்போது, சிறுநீர் அடர் மஞ்சள் நிறத்தில் இருந்து பொன் நிறம் வரை என அடர் நிறத்திற்கு மாறும். இவ்வாறாக, தொடர் நீரிழப்பு ஏற்படும் பட்சத்தில், உடல் தண்ணீரை சேமிக்க முயற்சிக்கிறது, இதன் விளைவாக சிறுநீர் உற்பத்தி குறைகிறது. சிறுநீரில் உள்ள தாதுக்கள் மற்றும் உப்புகள் அதிக செறிவு மற்றும் படிகமாக மாறும் என்பதால் இது சிறுநீரக கற்களின் அபாயத்தையும் அதிகரிக்கும்.
சில நேரங்களில், வறண்ட வாய் அல்லது தாகம் போன்ற உணர்வை நீங்கள் அனுபவிக்கலாம். இது நீரிழப்புக்கான ஆரம்ப அறிகுறிகளாகும். இவை பொதுவான அறிகுறிகள் என்றாலும், அவை பெரும்பாலும் கவனிக்கப்படுவதில்லை, குறிப்பாக குளிர்ச்சியான காலநிலையில் அல்லது பிஸியான நாட்களில் நாம் தாகமாக உணராதபோது இதனை கண்டுகொள்வதில்லை.
தலைவலி மற்றும் தலைச்சுற்றல் ஆகியவை நீரிழப்புடன் தொடர்புடைய மற்ற அறிகுறிகளாகும். உடலுக்கு தேவையான நீர் குறைவாக இருக்கும்போது, மூளைக்கு இரத்த ஓட்டம் மற்றும் ஆக்ஸிஜன் குறைவதால் இவை ஏற்படுகின்றன.
இதையும் படிக்க: காலை உணவில் முளைகட்டிய பச்சை பயிறு வகைகளை சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா...?
உடலில் நீரிழப்பு ஏற்படுவதற்கான காரணங்கள்
நீரிழப்புக்கான அறிகுறிகள் பல காரணங்களைக் கொண்டிருக்கலாம் என்றாலும், அவை புறக்கணிக்கப்படக் கூடாது, குறிப்பாக நீரிழப்பு வேறு சில அறிகுறிகளுடன் இருந்தால் உடனடி கவனிப்பு அவசியம். மிகவும் கடுமையான சந்தர்ப்பங்களில், நீரிழப்பு சிறுநீரக பாதிப்புக்கு கூட வழிவகுக்கலாம்.
சூரிய ஒளியின் பற்றாக்குறையால், குளிர்காலத்தில் கல் உருவாவதற்கான வாய்ப்பு அதிகம். இதன் விளைவாக வைட்டமின் டி அளவுகள் குறைந்து சிறுநீரக கற்கள் உருவாகின்றன.
குளிர்காலத்தில் நாம் தண்ணீரை குறைவாகவே குடிப்போம். இது நம் உடலில் நீர் பற்றாக்குறையை ஏற்படுத்தும். உடலில் போதுமான நீர் இல்லாமல் சிறுநீரகங்கள் சிரமப்படும்போது இந்த பிரச்சனை நிகழ்கிறது. இது கடுமையான சிறுநீரக பிரச்சனைக்கும் வழிவகுக்கும்.
உடலில் எலக்ட்ரோலைட்டுகளின் சமநிலையின்மை, பெரும்பாலும் நீரிழப்புக்கு காரணமாகும். எலக்ட்ரோலைட் சமநிலையை பராமரிப்பதில் சிறுநீரகங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. மேலும் அவை சரியாக செயல்படாதபோது, அது தசை பிரச்சனைகள் மற்றும் நீரிழப்புக்கும் வழிவகுக்கும். இது பொதுவாக நம் உடலில் நீர் பற்றாக்குறையால் ஏற்படுகிறது.
இதையும் படிக்க: Winter snack: குளிர்காலத்தில் ஏற்படும் உடல் பாதிப்புகளை தவிர்க்க ஏற்ற தின்பண்டம் இதுதான்
நீரிழப்பு மிகவும் கடுமையானதாக மாறும்வரை பெரிதாக யாரும் அதை கண்டுகொள்வதில்லை. நீரிழப்பைத் தடுக்க மற்றும் உங்கள் சிறுநீரகங்களைப் பாதுகாக்க, நாள் முழுவதும் நீங்கள் போதுமான அளவு தண்ணீர் குடிப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். குளிர்காலத்தில் உடற்பயிற்சியின்போது அல்லது நீங்கள் நோய்வாய்ப்பட்டிருக்கும்போது இது மிகவும் முக்கியமானது.
உங்கள் உடலில் ஏற்படும் நுண்ணிய அறிகுறிகளை உணர்ந்து, குளிர்காலத்தில் சரியாக நீரேற்றமாக இருப்பதன் மூலம், நீங்கள் நல்ல சிறுநீரக ஆரோக்கியத்தையும், ஒட்டுமொத்த நல்வாழ்வையும் பராமரிக்கலாம். எனவே சீரான இடைவௌியில் தண்ணீர் குடிப்பதற்கென ஓர் வழக்கமான அட்டவணையை கடைபிடிப்பது நல்லது.
தண்ணீர் என்பது உங்கள் தாகத்தைத் தணிப்பது மட்டுமல்ல, நம் உடல் ஆரோக்கியத்திலும் முக்கிய பங்கு வகிக்கிறது. இது செரிமானத்திற்கு உதவுகிறது, உணவில் இருந்து ஊட்டச்சத்துக்களை நமது உடல் உறிஞ்ச உதவுகிறது.
First Published :
December 11, 2024 6:59 AM IST