Last Updated:December 24, 2024 1:59 PM IST
ஆசிரியர் பணியைத் துறந்து முழு நேர அரசியலில் இறங்கிய கலியபெருமாள், தனது தோழர்களுடன் இணைந்து நிலப்பிரபுக்கள், சர்க்கரை ஆலை உரிமையாளர்களுக்கு எதிராக பல தொழிலாளர் போராட்டங்களை நடத்தியுள்ளார்.
விடுதலை இரண்டாம் பாகம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், உண்மையில் அதில் இடம்பெற்றுள்ள கலியபெருமாள் வாத்தியார் யார், ஒடுக்கப்பட்ட மற்றும் நலிவு நிலை தொழிலாளர்களின் வளர்ச்சியில் அவரது பங்கு என்ன என்பது குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு...
வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள விடுதலை இரண்டாம் பாகத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள பெருமாள் வாத்தியார் கதாபாத்திரம் பேசுபொருளாக மாறியுள்ளது. இந்த பெருமாள் வாத்தியாரின் இயற்பெயர் கலியபெருமாள். கடலூர் மாவட்டம், பெண்ணாடம் அருகேயுள்ள சௌந்திர சோழபுரத்தை பூர்வீகமாகக் கொண்ட புலவர் கலியபெருமாள், தனது ஆரம்பக் காலகட்டங்களில் சாதி கொடுமைகளுக்கு எதிரான பெரியாரின் கொள்கையின் மீது கொண்ட மோகத்தால், திராவிடர் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். பின்பு இடதுசாரி தத்துவத்தில் ஏற்பட்ட நாட்டம் காரணமாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்த கலியபெருமாள் கடலூர், அரியலூர் பகுதியில் அரசியல் பணிகளில் ஈடுபட்டு வந்தார்.
தமிழ் இலக்கியத்தில் பட்டம் பெற்ற கலியபெருமாள், 1960-களில், அரியலூர் மாவட்டம், பொன்பரப்பியில் உள்ள பள்ளியில் தமிழ் ஆசிரியராகப் பணியாற்றினார். இருப்பினும், சாதி ஒழிப்பில் தீவிரம் காட்டி வந்த கலியபெருமாளால் ஆசிரியர் பணியில் கவனம் செலுத்த முடியவில்லை.
ஆசிரியர் பணியைத் துறந்து முழு நேர அரசியலில் இறங்கிய கலியபெருமாள், தனது தோழர்களுடன் இணைந்து நிலப்பிரபுக்கள், சர்க்கரை ஆலை உரிமையாளர்களுக்கு எதிராக பல தொழிலாளர் போராட்டங்களை நடத்தியுள்ளார்.
தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிறுவனர் சாரு மஜூம்தார் கொள்கையின் மீது பிடிப்பு கொண்ட கலியபெருமாள் ஏழை, எளிய மக்களிடம் அதிகமாக வட்டி வசூலிப்பவர்கள் மற்றும் பொதுச் சொத்துக்களை அபகரிப்பவர்களுக்கு எதிராகத் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டார்.
கலியபெருமாள் நடத்திய அறுவடை இயக்கம், கிராமப் புறங்களில் பிரபலமான நிலையில், தொடர்ந்து ஆயுதம் தாங்கிய போராட்டத்தில் கலியபெருமாள் ஈடுபட்டார். கடந்த 1987-ஆம் ஆண்டு அரியலூரை அடுத்த மருதையாற்றுப் பாலத்தைக் குண்டு வைத்துத் தகர்க்க கலியபெருமாள் திட்டமிட்ட நிலையில், சேதமடைந்த பாலத்தில் பயணித்த மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயில் விபத்துக்குள்ளாகி, 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இதில் கொலை வழக்கில் கலியபெருமாளுக்கும், அவருடைய மூத்த மகன் வள்ளுவனுக்கும் நீதிமன்றம் தூக்குத் தண்டனை வழங்கியது. மேலும், கலியபெருமானின் இரண்டாவது மகன் சோழ நம்பியார் உள்ளிட்ட ஐந்து பேருக்கு கடலூர் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. பின்னர், கலியபெருமாள் மற்றும் அவரது மகன் வள்ளுவனுக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது.
தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் கலியபெருமாள் உள்ளிட்டோருக்கு பரோல் கிடைத்த நிலையில், பின்னர் வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டார்.
இந்நிலையில், சென்னை சிறையில் இருந்த தனது தந்தையை விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் சந்தித்துப் பேசியதாக கலியபெருமாளின் இளைய மகன் சோழன் நம்பியார் தெரிவித்துள்ளார். பிரபாகரனுக்கு கலியபெருமாள் மார்க்சிய புத்தகங்களை இந்த சந்திப்பில் பரிந்துரைத்ததையும் சோழன் நம்பியார் நினைவு கூறுகிறார்.
2007ஆம் ஆண்டு உயிரிழந்த கலியபெருமாளுக்கு அவரது சொந்த ஊரில் நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. அதேநேரம் அவர் வாழ்ந்த வீடோ சிதிலமடைந்து காணப்படுகிறது.
Location :
Chennai [Madras],Chennai,Tamil Nadu
First Published :
December 24, 2024 1:20 PM IST